லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படம் மிஷன் இம்பாசிபிள் 5 ரப் நேஷன், இந்தப் படத்தின் இறுதிக் கட்டக் காட்சிகளின்போது டூப் எதுவும் போடாமல் பறக்கும் விமானத்தில் தொங்கியபடி நடித்து இருக்கிறார் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ்.
மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் 4 பாகங்கள் வெளிவந்து முறையே மாபெரும் வெற்றியைப் பதிவு செய்து இருக்கின்றன. மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகம் 1996 ம் ஆண்டு வெளிவந்து 20ம் நூற்றாண்டின் மிக அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
முதல் 4 பாகங்களிலும் நாயகனாக நடித்த டாம் குரூஸ் தற்போது வெளிவர இருக்கும் 5 வது பாகத்திலும் நாயகனாக நடித்து இருக்கிறார்.
5 வது பாகத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பின்போது தான் இந்த மாதிரி உயிரைப் பணயம் வைத்து பறக்கும் விமானத்தின் வெளியில் நின்றபடி நடித்து இருக்கிறார் டாம் குரூஸ். 53 வயதான டாம் குரூஸ் இந்தக் காட்சியில் நடித்ததைப் பார்த்து மொத்த படப்பிடிப்புக் குழுவினரும் அசந்து போய் விட்டனராம்.
இந்தக் காட்சியில் நடிக்கும்போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், விமானத்தை தரை இறக்குவது முடியாத ஒன்று என்று படபிடிப்புக் குழுவினர் எச்சரித்தும் கூட டாம் குரூஸ் துணிந்து இந்தக் காட்சியில் நடித்து இருக்கிறார்.
தற்போது டாம் குரூஸ் விமானத்தில் தொங்கியபடி நடித்தது மற்றும் அவருக்கு பறந்தபடி சண்டை போட சொல்லிக் கொடுத்த கலைஞர்களின் பேட்டிகள் ஆகியவை வீடியோவாக வெளியாகி உள்ளன.
படம் வரும் ஜூலை மாதம் 31 ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது, முதல் 4 பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் 5 ம் பாகத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Post a Comment