சென்னை: விஜய் தொலைக்காட்சியின் சரவணன்-மீனாட்சி தொடரில் ஆபாசம் மற்றும் அருவெறுக்கத்தக்க வசனங்கள் இடம்பெறுவதாக சில நாட்கள் முன்பு 'தட்ஸ்தமிழில்' செய்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இனிவரும் எபிசோட்களில் இரட்டை அர்த்த வசனங்களை கட் செய்துவிட்டு, நாகரீகமான காட்சியமைப்பு மற்றும் வசனங்களை வைத்துக்கொள்ள சீரியல் குழு முடிவு செய்துள்ளது.
'ஆபாசம், அருவெறுப்புகளின் உச்சம் தொட்டு ஷாக் கொடுத்த விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி' என்ற தலைப்பில் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பான தொடர் முழுக்கவும், நேயர்கள் முகம் சுழிக்கும் வகையில் இருந்ததையும் அந்த செய்தியில் சுட்டி காட்டியிருந்தோம். அந்த செய்திக்கு வாசகர்கள் பலரும் ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருந்தனர்.
செய்தியறிந்த மெகா தொடர் குழுவினர், இனிவரும் எபிசோட்களில் இரட்டை அர்த்த காட்சிகளையும், வசனங்களையும் தவிர்க்க முடிவு செய்துள்ளனராம். இதை உறுதி செய்யும்விதமாக, 'இணையதள செய்தியை பார்த்த பிறகு, சரவணன் மீனாட்சி, சீரியலை நாகரீகமான வகையில் கொண்டு செல்ல சீரியல் குழுவினர் முடிவு செய்துள்ளனர்' என்று தமிழ் முன்னணி நாளிதழ் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரசிகர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு மாற்றம் செய்ய முன்வந்திருக்கும் சரவணன் மீனாட்சி சீரியல் குழு பாராட்டுக்குரியதே.
Post a Comment