சென்னை: தனுஷின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று(ஜூலை 17) வெளிவந்த மாரி திரைப்படம், இதுவரை தனுஷ் திரைப்படங்கள் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளது. ஆமாம் மாரி படம் முதல் நாளில் மட்டும் சுமார் 6.54 கோடியை தமிழ்நாட்டில் வசூலித்து சாதனை செய்துள்ளது.
படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கூட படம் வசூலில் சாதனையை நிகழ்த்தி இருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கி உள்ளது. தனுஷின் படங்களில் அதிகம் வசூல் செய்த வேலை இல்லாப் பட்டதாரி படமே முதல் நாளில் 4.45 கோடியை மட்டுமே வசூலித்து இருந்தது.
ஆனால் மாரி திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் 2 வது நாளான நேற்று சுமார் 6 கோடியைத் தாண்டி இருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகிறார்கள்.
இன்று அனைவருக்கும் விடுமுறையாக இருப்பதால் இன்றைய வசூலும் அதிகமாகவே இருக்கும் என்று திரைத்துறையைச் சார்ந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மாரி படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் கேட்காததால் தனுஷே வாங்கிக் கொண்டார், மேலும் தனது சம்பளத்தில் இருந்தும் குறிபிட்ட அளவுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார்.
இந்த எல்லா சோகங்களுக்கும் முடிவு கட்டுவது போல மாரி திரைப்படம் வசூலில் சாதனை செய்து வருவதால் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார் தனுஷ், அதே நேரம் மாரி படக்குழுவினரும் படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment