இசையமைப்பாளர் இளையராஜா இசைஞானி என்றால், எம்எஸ்வியோ இசைக் கடவுள். ஞானிகளுக்குத்தான் கடவுளைப் பற்றித் தெரியும் என்றார் ரஜினிகாந்த்.
தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இளையராஜாவின் என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசைக் கச்சேரி நடந்தது. மறைந்த இசை மேதை எம்எஸ்விக்கு இசையஞ்சலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
மேடையில் ‘எம்.எஸ்.விஸ்வநாதன்' உருவப்படம் வைக்கப்பட்டு அதற்கு இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இசைக்கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியை துவக்கினார் இளையராஜா. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் பாடப்பட்டன.
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே வந்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த் இறுதி வரை பங்கேற்று இசையை ரசித்தார்.
பின்னர் ரஜினியை நோக்கிய இளையராஜா, 'சாமி, மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசுங்க," என்று அழைத்தார்.
ரஜினி பேசுகையில், "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு சாமி. பெரிய மகான், அவர் நினைவை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இளையராஜா இசைஞானி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசை சாமி. அந்த கடவுளை பற்றி இந்த ஞானிக்கு தான் தெரியும்.
அவரைப் பற்றி நம்மைப் போன்ற பாமர மக்களுக்கு இசைஞானிதான் உணர்த்த வேண்டும். இந்த இசை நிகழ்ச்சியில் என்னைப் போன்றவர்கள் கலந்து கொண்டோம் என்பதே பெரிய ஆசீர்வாதம்," என்றார்.
Post a Comment