மக்கள் குடியரசுத் தலைவராக வாழ்ந்து மறைந்த டாக்டர் அப்துல் கலாம், இந்திய நாட்டுக்கே பெருமை தேடித் தந்தவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்துல் கலாம் மறைவுக்கு அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
இந்திய தேசத்தின் குடியரசு தலைவராக இருந்த நமது ஆபஜெ அப்துல் கலாம் அவர்களின் மறைவு நம் நாட்டிற்கு நேர்ந்த பேரிழப்பு. மாளிகையில் உயர் பதவியில் இருந்தாலும் அவரது சிந்தனையெல்லாம் எளிய மக்களை பற்றியும், எதிர்கால இந்தியாவை வலிமையாக்க மாணவர்களை சந்திப்பதிலும்தான் இருந்தது. இந்த அரிய குணத்தினால் உலகத் தலைவர்களெல்லாம் இந்தியாவை பெருமையோடு பார்க்கும் நிலை வந்தது.
அவரது எளிமையான வாழ்க்கை எல்லோரையும் வியக்க வைத்தது. பதவியில் இருக்கும்போதும்,இல்லாதபோதும் இடைவிடாத கல்விப் பணியில் தன்னை தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.
உலக நாட்டுத் தலைவர்களிடையே பேசும்போது 'கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற வரிகளை தமிழிலே சொல்லி தமிழ்ர்களுக்கு பெருமை தேடித் தந்தார்.
கடைசி நிமிடம் வரை மாணவர்களிடையே உரையாடிக்கொண்டிருந்தார் டாக்டர் கலாம் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
டாகட்ர் ஆபஜெ அப்துல்கலாம் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் பேரிழப்பு.
Post a Comment