சென்னை: சிம்புவின் நடிப்பில் உருவான வாலு திரைப்படம் கடந்த ரம்ஜான் அன்று திரைக்கு வரவிருந்தது, கடைசி நேரத்தில் மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் வாலு படத்தின் மீது வழக்குத் தொடர்ந்ததால் படம் வெளியாகவில்லை.
தொடர்ந்து வாலு படத்தை வெளியிட சிம்புவும் அவரது தந்தை டி.ராஜேந்தரும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறப் போகிறது என்று 2 தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
அது உண்மைதான் என்று சொல்லுவதுபோல மேலும் ஒரு செய்தி தற்போது வெளியாகி உள்ளது, இந்த செய்தியைப் பார்க்கையில் வாலு கண்டிப்பாக வெளியாகும் என்று சற்று நம்பும் விதமாகவே உள்ளது.
அதாவது அடுத்த மாதம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்யாவின் நடிப்பில் உருவான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க மற்றும் ஜெயம் ரவியின் தனி ஒருவன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.
இதில் ஆர்யாவின் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும், ஜெயம் ரவியின் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வெளியிடுகின்றன.
இந்த 2 திரைப்படங்களுக்கும் போட்டியாக சிம்புவின் வாலு திரைப்படமும் வெளியாகிறது என்று செய்திகள் கசிந்துள்ளன. இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் தியேட்டர் தொடங்கி பாக்ஸ் ஆபிஸ் வரை, கடும் போட்டியை மேற்கண்ட 3 படங்களும் சந்திக்கக் கூடும்.
Post a Comment