அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மணிரத்னம் இயக்கிய ரோஜா, பாம்பே மற்றும் தில்சே ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
உலகத் திரைப்பட ஆர்வலர்கள் ஒன்றுகூடும் இடம் நியூயார்க் அஸ்டோரியாவில் இயங்கும் ‘ம்யூசியம் ஆஃப் மூவிங் இமேஜ்' என்ற அரங்கில் இந்தப் படங்கள் திரையிடப்படுகின்றன.
இங்கு உலகின் தலைசிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சிகள், ஒரு இயக்குநரின் சிறந்த படங்களின் திரையிடல், இயக்குநர்களின் நேரடியான சந்திப்புக்கள் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.
இம்மாத இறுதியில் இயக்குநர் மணி ரத்னத்தின் மூன்று திரைப்படங்கள் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2 வரை திரையிடப்படும். இந்த மூன்று நாள் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் மணிரத்னம் நேரடியாகப் பங்கேற்கிறார்.
நிகழ்ச்சி இயக்குநர்களில் ஒருவரான ரிச்செர்ட் பெனா இதுபற்றிக் கூறுகையில், ‘தமிழ் சினிமாவில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியவர் மணிரத்னம். இவரது திரைப்படங்கள் சிறப்பான காட்சியமைப்புகளுக்காகவும், சிறந்த பொழுதுபோக்காகவும் அதே சமயம் அரசியல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களாக இருக்கும். வணிகத் திரைப்படம், கலைப்படம், அரசியல் படம் என்று காலகாலமாக திரைப்படங்களை பாகுபடுத்திக் கொண்டிருக்கும் விமரிசகர்களின் கூற்றுக்களைப் பொய்ப்பிக்கும் வகையில் மணி ரத்னத்தின் படங்கள் இவற்றின் அத்தனை கூறுகளை ஒருங்கிணைத்தே இருக்கும். மணி ரத்னம் சினிமா உலகின் ஒரு அரிய பொக்கிஷம். இந்த நிகழ்ச்சியில் அவருடைய புகழ்மிக்க படங்களை 35 எம் எம் மிகப் பெரிய திரையில் திரையிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்,' என்றார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா நிறுவனர் கிரிஸ்டினா முரெளடா, நியூயார்க் திரைப்பட விழா முன்னாள் இயக்குநர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ரிச்செர்ட் பெனா, மற்றும் உமா தா குன்ஹா ஆகிய மூவரும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார்கள்.
திரையிடல் விவரம்:
ரோஜா - ஜூலை 31, 2015
பாம்பே - ஆகஸ்ட் 1, 2015
தில் சே - ஆகஸ்ட் 2, 2015
Post a Comment