'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன், அடுத்து அர்ஜூனை வைத்து படம் இயக்குகிறார்.
'கப்பல்' படத்தை தயாரித்த ஐ ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் ஹாலிவுட் ஸ்டைலில் தயாராகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் குறித்து அருண் வைத்தியநாதன் கூறுகையில், "என் ஒவ்வொரு படமும் மற்றொரு படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருப்பேன். அச்சமுண்டு அச்சமுண்டு ஒரு சமுதாய பிரச்சனையைப் பற்றிய படம் என்றால், மலையாளத்தில் மோகன் லால் சாரை வைத்து நான் இயக்கி பெரும் வெற்றி அடைந்தத 'பெருச்சாழி' திரைப்படம் அரசியல் பற்றிய படமாகும்.
எனது அடுத்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான கதை எழுதுவதில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் என் மனத்தில் உதித்ததுதான் இந்தப் படத்தின் மையக் கரு. அந்த கதைக் கருவை எனது நண்பர் ஆனந்த் ராகவ் உடன் இணைந்து மேலும் மேருகேற்றினேன். எனது தயாரிப்பாளர்கள் சுதன் இடமும், உமா ஷங்கர் இடமும் கதையைப் பற்றி விவாதித்தோம்.
எங்கள் மனதில் அந்த கதையின் நாயகன் பாத்திரத்துக்கு அர்ஜுன்தான் பொருத்தமாக இருப்பார் என தோன்றவே அவரை அணுகினோம். ஒரு காவல் துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தோற்றத்திலும் சரி, செயல் வடிவிலும் சரி அவர் ஒருவரே பொருத்தமாக இருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
ஒரு சினிமா போலீசாக இல்லாமல் நிஜத்தில் ஒரு காவல் அதிகாரி எப்படி நிதானமாக ஆழமாக ஒரு பிரச்சனைக்கு தீர்வுக் காண்பாரோ அந்த ஆழத்தை அர்ஜுனின் கதா பாத்திரம் வெளிப்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படத்தில் மேலு பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
சர்வதேச அளவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் தலை சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்," என்றார்.
Post a Comment