சென்னை: கமலின் "மய்யம்" என்ற தலைப்பினை அவரிடமிருந்து அனுமதி பெற்று தன்னுடைய படத்திற்கு பெயராக சூட்டியுள்ளார் ஓவியராய் இருந்து தற்போது தயாரிப்பாளராகியுள்ள ஸ்ரீதர்.
இலக்கியத் துறையில் அதீத ஆர்வமுடைய சினிமாக்காரர் கமல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அவர் கட்டுரைகளும், கவிதைகளும் கூட எழுதியுள்ளார். இந்நிலையில் தன்னுடைய படைப்புகளை வெளியிடுவதற்காக சிறிது காலம் "மய்யம்" என்ற இலக்கிய இதழ் ஒன்றினை நடத்தி வந்தார்.
சிறிது நாட்களுக்குப் பின் பல்வேறு காரணங்களால் அந்த இதழ் நிறுத்தப்பட்டு விட்டது. எனினும், கமல் ரசிகர் மன்ற இதழாக வெளிவந்து கொண்டிருந்த அவ்விதழ் பின்னர் முழுவதுமாக மூடப்பட்டது.
தற்போது அந்த "மய்யம்" என்கின்ற தலைப்பிற்காக கமலிடம் அனுமதி பெற்ற ஓவியர் ஸ்ரீதர் அப்படத்தினை தயாரித்துள்ளார். கமலின் பல்வேறு உருவங்களை வரைந்து அவரது அன்புக்குப் பாத்திரமானவர் ஏ.பி.ஸ்ரீதர் என்பதால் தன் வசமுள்ள பத்திரிகை மற்றும் இணையதளத்தின் "மய்யம்" என்கிற தலைப்பை அன்புடன் இந்தப் படத்துக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார் கமல். இப்படத்தினை ஆதித்யா பாஸ்கரன் என்கின்ற நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர் இயக்கியுள்ளார்.
ஒரே இரவில் நடக்கும் கதை இது. வங்கியில் கொள்ளையடிக்க வரும் ஒரு கும்பல் வங்கிக்குள் மாட்டிக்கொள்கிறது. ஒரு அறையில் கொள்ளைக் கும்பலும், மற்றொரு அறைக்குள் அவர்களை வழிநடத்தும் ரோபோ சங்கரும் இருக்கிறார்கள். விடிவதற்குள் தப்பியாக வேண்டும் என்ற நிலையில், கொள்ளையர்களை ரோபோ எப்படி வழிநடத்துகிறார் என்பதுதான் கதையாம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் ஸ்ரீதர். விரைவில் கமல் வெளியிட இப்படத்தின் இசை வெளியாகவிருக்கிறது.
"மய்யம்" திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் திகில் உணர்வுகளின் கலவையாகும். இதில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் வெவ்வேறு கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment