கேரளாவில் மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் தெரு நாய்களைக் கொல்ல மோகன் லால் கோரிக்கை விடுத்ததை நேற்று செய்தியாக வெளியிட்டிருந்தோம் அல்லவா...
இன்று அதற்கு எதிர்வினையாக, தெரு நாய்களைக் கொல்லக் கூடாது என்று கூறி நடிகர் விஷால் நாளை சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தை விட கேரளாவில் மூன்று மடங்கு அதிக தெருநாய்கள் உள்ளன. இதனால் மக்கள் அடிக்கடி துன்பத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக சிறுவர் சிறுமியரை இந்த நாய்கள் கடித்து குதறி வைக்கின்றன.
எனவே அந்த நாய்களைக் கொல்ல பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் மோகன்லாலும் மக்களின் கோரிக்கையை ஏற்று தெரு நாய்களைக் கொல்லுமாறு கேரள அரசைக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தெரு நாய்களை பிடித்து கூண்டோடு அழிக்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கு பிராணிகள் நல அமைப்பும், பிராணிகள் நல ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் தெருநாய்களை கொல்லக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (25-ந் தேதி) பிராணிகள் நலபாதுகாப்பு அமைப்பு தெரு நாய்களை கொல்லப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளது. இதில் நடிகர் விஷால் கலந்து கொள்கிறார். பிராணிகள் நல ஆர்வலர்கள் பலரும் பங்கேற்கிறார்கள். நடிகை த்ரிஷாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஷால் கூறுகையில், "தெரு நாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் உண்ணாவிரதத்தில் நானும் கலந்து கொள்கிறேன். பிராணிகளை நேசிக்கிறவன் என்ற முறையில் இதில் பங்கேற்கிறேன்.
எனக்கு நாளை படப்பிடிப்பு இருக்கிறது. ஆனாலும் சில மணி நேரங்கள் உண்ணாவிரதம் இருப்பேன். அதன்பிறகு படப்பிடிப்புக்குச் செல்வேன்.
நாய்களுக்கும் சமூகத்தில் வாழ்வதற்கு உரிமை உண்டு. அவற்றைக் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. கேரளாவில் பிராணிகள் மீதான குரூர நடவடிக்கையை நிறுத்தும்படி உண்ணாவிரதத்தில் கோஷங்கள் எழுப்பப்படும்," என்றார்.
இந்த உண்ணாவிரதத்தில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment