மெல்லிசை மன்னர் மறைவையொட்டி நாளை படப்பிடிப்புகள் ரத்து: பெப்சி அறிவிப்பு

|

சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மறைவையொட்டி நாளை ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

1200 படங்களுக்கும் மேல் இசையமைத்த பழம் பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று காலை சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Tamil film shooting cancelled tomorrow

இந்த சூழ்நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவையொட்டி நாளை ஒருநாள் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத பொக்கிஷம், இசையுலகில் முடிசூடா மன்னன், திரையுலகில் புராண வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி தனக்கென்று ஒரு பாணி வகுத்து மெல்லிசை மன்னர் என பட்டம் பெற்ற இசைத்தாயின் மூத்த மகன் பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று நம்மை எல்லாம் விட்டு பிரிந்து இறைவனிடமும், இயற்கையிடமும், இசையிடமும் கலந்து விட்டார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் நாளை ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது' என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

Post a Comment