கே பாலச்சந்தருக்கு சிலை... இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை!

|

சென்னை: இயக்குநர் சிகரம் என அழைக்கப்பட்ட மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க வேண்டும் என இயக்குநர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Tamil cinema directors request statue for K Balachander

ஏற்கெனவே தலைவராக இருந்த விக்ரமன், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இவர்கள் அனைவரும் மீண்டும் அந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இதேபோல் இணைச் செயலாளர்களாக சுந்தர் சி, பேரரசு, லிங்குசாமி, ஏகாம்பவாணன், ஆ.ஜெகதீசன் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

செயற்குழுவுக்கு 17 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 2015-2017-ம் ஆண்டுக்கான இயக்குநர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்க தலைவர் விக்ரமன் தலைமை தாங்கினார். பொருளாளர் வி.சேகர் முன்னிலை வகித்தார்.

கூட்டம் முடிந்தபின், விக்ரமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இயக்குநர்கள் சங்க வரலாற்றில் முதல்முறையாக அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அணியினர் செய்த சேவைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.

வருகிற ஆண்டுகளில், முடங்கிக் கிடக்கும் படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்வோம்.

சமையல் கேஸ் மானியத்தை நான் திருப்பிக் கொடுத்து விட்டேன். எங்கள் சங்க உறுப்பினர்களாக இருக்கும் மேலும் 200 பேர் கியாஸ் மானியத்தை திருப்பிக் கொடுக்க முன்வந்துள்ளனர்.

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு நான் உடல் தானம் செய்து இருக்கிறேன். இதுபோல் சங்க உறுப்பினர்கள் 200 பேர்களும் உடல் தானம் செய்ய முன்வருவார்கள்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு சென்னை மயிலாப்பூரில் சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்,'' என்றார்.

 

Post a Comment