சென்னை: சென்னையின் புதிய அடையாளங்களில் ஒன்றாக மாறியிருக்கும் மெட்ரோ ரெயில்களில், சினிமா படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள மெட்ரோ ரெயில் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில்(கோயம்பேடு- ஆலந்தூர்) மட்டுமே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது, அதுவும் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே என்பதால் ஆரம்பத்தில் பயணிகளிடம் இருந்த வரவேற்பு தற்போது இல்லை.
இதனால் மெட்ரோ ரெயில் சரிவை நோக்கி பயணிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது, இதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்று அதிகாரிகள் யோசித்த போது சினிமா துறையினர் மெட்ரோ ரெயில்களில் படம் பிடிக்க ஆர்வமுடன் இருந்தனர்.
முதலில் படப்பிடிப்புக்கு மறுத்தாலும் மெட்ரோ ரெயிலின் வருமானம் மற்றும் மும்பை, டெல்லி மெட்ரோ ரெயில்களில் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அங்குள்ள அதிகாரிகள் அனுமதி அளித்தது போன்றவற்றை கணக்கில் கொண்டு தற்போது சென்னை மெட்ரோ ரெயில்களிலும் சினிமா படப்பிடிப்புகளை நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
அனுமதி அளிக்கும் முன்பு டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளுடன் இங்குள்ள அதிகாரிகள் ஆலோசனை நடத்தி அதன் பின்பே ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.
பொதுவாக இந்தியா முழுவதும் ரெயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது, எனவே மெட்ரோ ரெயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது, மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதிக நேரத்திற்கு மெட்ரோ ரெயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரெயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மணிரத்னம் சார் நோட் பண்ணிக்குங்க...
Post a Comment