பேயுடன் ரொம்ப சினேகமாக குடித்தனம் நடத்தத் தொடங்கிவிட்டது தமிழ் சினிமா. கோடம்பாக்கத்தில் அடுத்து வரும் பேய் கோப்பெருந்தேவி. ரொம்ப நாளாக கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் இந்தப் பேய் வரும் செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகிறது.
புதுமுக இயக்குனர் ஹ்ருஷிகேஷ அச்சுதன் சங்கர் இயக்கியுள்ளார். சக்தி டாக்கீஸ் ஏ.ராஜசேகர் ரெட்டி தயாரித்துள்ளார்.
இதில் கோவை சரளா, வி.டி.வி கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், மனோபாலா, சாமி நாதன், வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, சாம்ஸ், அனுமோகன், வெங்கல்ராவ், பயில்வான் ரங்கநாதன், அல்வா வாசு உள்ளிட்ட பதினெட்டு நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஊர்வசி, தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், இளவரசு ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஆராத்யா என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ்சினிமா வரலாற்றில் பனி பொழியும் லடாக் பகுதியில் செட் போட்டு படமாக்கிய முதல் படம் இதுவே என்கிறார் இயக்குநர்.
அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் புதையலை எடுக்க ஒரு நகைச்சுவைப் பட்டாளம் கிளம்புகிறது. அந்த புதையலை பேய் ஒன்று பாதுகாத்து வருகிறது எனும் விஷயம் தெரியாமல் அவர்கள் அந்த பேயிடம் மாட்டி என்னவெல்லாம் சின்ன பின்னமாகிறார்கள் என்பதுதான் கதையாம்.
இந்தப் படம் வெளியாகும் தேதியில் ருத்ரமாதேவி உள்ளிட்ட 5 பெரிய படங்களும் வெளியாகின்றன. அவற்றிடம் இந்தப் பேய் சிக்கிக் கொள்ளுமா, தப்பிப் பிழைக்குமா.. பார்க்கலாம்!
Post a Comment