எந்திரன் 2 படத்தை ரஜினி முடித்த பிறகு, அவரை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலியின் கதையை எழுதியவர்தான் இந்த விஜயேந்திர பிரசாத்.
இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள பாகுபலி படம் உருவாக முக்கிய காரணமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரஜினி, பாகுபலி படம் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி விஜயேந்திர பிரசாத்துக்கு பொன்னாடை போர்த்தினார் ரஜினி.
இந்த சந்திப்பின்போது, ரஜினியை வைத்து ஒரு படம் தமிழ் - தெலுங்கில் எடுப்பது குறித்து பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து விஜயேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, "ரஜினிசார் எனக்கு ஒரு படம் நடித்து தர சம்மதித்திருப்பது உண்மைதான். அந்தப் படத்தை நான் கதை எழுதி இயக்குவேன். இது என் நெடுநாள் விருப்பம்," என்றார்.
இந்தியில் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையை எழுதியவரும் இதே விஜயேந்திர பிரசாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment