சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இதனையொட்டி முன்னணி நடிகர்களை சந்தித்து தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர் நடிகர் விஷாலும், சரத்குமாரும்.
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்தை சந்தித்து அவரிடம் தங்கள் அணிக்கு ஆதரவு கோரியிருக்கின்றனர் விஷால் அணியினர், நேற்று விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.
விஷால் மற்றும் நடிகர் பொன்வண்ணன் உள்ளிட்ட சிலபேர் சந்தித்து நடிகர் சங்கத் தேர்தல் விஷயமாக விவாதித்ததாகவும், விஜயகாந்த் அவர்களிடம் நீண்ட நேரம் உரையாடியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது நடிகர் சங்கத்தின் மீதான கடனை, நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
எனவே முன்னாள் சங்கத் தலைவர் என்ற முறையில் அவரின் ஆதரவை முக்கியமாக 2 அணியினரும் எண்ணுகின்றனர், இந்நிலையில் தற்போது நடந்த இந்த சந்திப்பு சினிமா உலகில் அதிர்ச்சி கலந்த ஆச்சரிய அலைகளை உருவாக்கியுள்ளது.
ஆனால் கேப்டனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லவே நேரில் அவரை சந்தித்துப் பேசினோம் என்று விஷால் அணியினர் கூறியிருக்கின்றனர். (நம்பிட்டோம் பாஸ்)
கடந்த வாரம் ரஜினி, கமலை சந்தித்து ஆதரவு கோரிய விஷால் அணியினர் தற்போது கேப்டனை சந்தித்திருக்கின்றனர், அடுத்ததாக நடிகர்கள் விஜய் மற்றும் அஜீத்தை சந்திக்கவிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
பெரிய நடிகர்கள் அனைவரையும் சந்தித்த பிறகு பொதுவாக அனைத்து நடிகர்களையும் சந்தித்து விஷால் அணியினர் ஆதரவு திரட்ட இருப்பதாக, விஷாலிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சங்கத் தேர்தல பாக்குறப்போ வின்னர் படத்தில வடிவேலு சொன்ன டயலாக் தான் ஞாபகம் வருது, "சண்டையில கிழியாத சட்டை ஏது"
Post a Comment