சென்னை: கோலிவுட்டில் பெருகி வருகின்ற பேய்ப் படங்களின் வரிசையில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் "ஜின்". இப்படத்தின் அறிமுக நாயகியும், பல் டாக்டருமான மாயாவிடம் படப்பிடிப்பின்போதே ஒரு பெண் பேய் பல் வலிக்கு மருத்துவம் பார்க்க கேட்டதால் அவர் அலறிவிட்டாராம். இச்செய்தி கோலிவுட்டில் தற்போது உலா வருகின்றது.
இதுகுறித்து அவர், " படப்பிடிப்பில் ஒரு வித்தியாசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. ஒருநாள் நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்தபோது தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்புக்கு செவி சாய்த்தேன்.
யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசினால் நடுங்கும் குரலில் ஒரு பெண். என்னவென்று விசாரித்தால் எனக்கு பல் வலி , வைத்தியம் பார்ப்பிங்களா என்றுக் கேட்டது.
என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். நான் ரத்த காட்டேரி, எனக்கு பல் வலி. இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை என்று கேட்டுவிட்டு கட கட என சிரிக்க ஆரம்பித்தது.
நான் அவ்வளவுதான், அம்மா என்று பயத்தில் கத்தி விட்டேன். பயத்தால் காய்ச்சல் வந்து விட்டது. விளையாட்டுக்கு யாராவது செய்து இருப்பார்கள் என்பது புரிகிறது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது. அதை செய்தது யார் என்று இன்னமும் தெரியவில்லை. இனிமேலாவது சொல்கிறார்களா பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment