நடிகர் சங்கத் தேர்தலில் என் ஆதரவு சரத்குமார், ராதாரவி அணிக்குத்தான் என்று அறிவித்துள்ளார் நடிகர் சிம்பு.
நடிகர் சங்கத் தேர்தல் வரும் செப்டம்பர் 1-ம் தேதி நடக்கவிருக்கிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள இந்தத் தேர்தலில் இப்போது பதவியில் உள்ள சரத்குமார் அணி போட்டியிடுகிறது.
இவர்களுக்கு எதிராக விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் அடங்கிய புதிய அணி களமிறங்கியுள்ளது. சரத்குமார் அணிக்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் செய்துவரும் இவர்கள், ரஜினி, கமல் உள்ளிட்டோரைப் பார்த்து ஆதரவு கேட்டு வருகின்றனர். விரைவில் முதல்வர் ஜெயலலிதாவையும் பார்க்கப் போகிறார்களாம்.
இந்த நிலையில் நேற்று வாலு பட வெற்றி சந்திப்பில் நடிகர் சிம்புவிடம் நடிகர் சங்கத் தேர்தலில் அவரது ஆதரவு யாருக்கு என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சிம்பு, "நான் விஜய்காந்த் தலைவராக இருந்தபோதிலிருந்து உறுப்பினராக இருக்கிறேன். இப்பொழுது நடக்கும் தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு என்று ஏதும் கிடையாது. சரத்குமாருக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு. அவர்கள் தான் நடிகர் சங்கத்திற்காக அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.
ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர் எனக்கு எதிரிகள் அல்ல. அவர்களும் என்னுடைய நல்ல நண்பர்கள். இப்போதும் பேசிக் கொண்டு இருக்கிறோம். தேர்தல் வரைதான் அணிகள். தேர்தலுக்குப் பிறகு அணிகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்..," என்றார்.
Post a Comment