ரஜினி படத்தில் நடிப்பதன் மூலம் என் கனவு நிறைவேறிவிட்டது என்று நடிகை தன்ஷிகா கூறினார்.
லிங்கா' படத்தை அடுத்து ரஜினிகாந்த், ‘கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்க, ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘கபாலி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்கிறார். நடிகை தன்ஷிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
தன்ஷிகா உண்மையிலேயே ரஜினியின் தீவிர ரசிகை. ரஜினி ரசிகர்களின் விழாக்களுக்கு தவறாமல் செல்பவரும் கூட. சிறு படங்களில் நாயகியாகவும், பெரிய படங்களில் சின்னச் சின்ன வேடங்களிலும் நடித்து வந்த அவருக்குகு ரஜினி படத்தில் நடிப்பது பெரிய முன்னேற்றம்.
இதுகுறித்து தன்ஷிகா கூறுகையில், "ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகர். அவருடன் நடிப்பதற்கு எல்லா நடிகைகளுமே ஆசைப்படுவார்கள். எனக்கு அந்த அதிர்ஷ்டம் எதிர்பாராதவிதமாக கிடைத்து இருக்கிறது.
நான், சின்ன வயது முதலே ரஜினிகாந்தின் தீவிர ரசிகை. அவர் நடிக்கும் எல்லா படங்களையும் பார்த்து விடுவேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என் சினிமா வாழ்க்கையில் இதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. கடவுளுக்குத்தான் நன்றி.
‘கபாலி' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பே என்னிடம் கேட்டார்கள். படத்தில், ரஜினிகாந்தின் மகளாக நடிக்கிறேனா? என்று எனக்கு தெரியாது. என்ன வேடம் என்று என்னிடம் சொல்லவில்லை," என்றார்.
Post a Comment