ஹைதராபாத்: பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்து வியந்து போன நடிகை ஸ்ரீதேவி தற்போது உருவாகி வரும் 2 வது பாகத்தில் நடிக்க மிகவும் ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான படம் பாகுபலி.
படத்தின் பிரம்மாண்டமும், காட்சியமைப்புகளும் வசூலில் பாகுபலியை உச்சம் தொடவைத்தன, மேலும் தற்போதைய நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது படத்தைப் பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பாகுபலி படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதிகம் பேசப்பட்டன என்றாலும், அதில் முக்கியமான கேரக்டர் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி கேரக்டர்தான்.
கம்பீரமும், ஆழமான வசனங்களும் நிறைந்த அந்த கேரக்டருக்கு முதலில் கேட்கப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி தான், ஆனால் அவர் கேட்ட பெருந்தொகை காரணமாக வாய்ப்பு ரம்யா கிருஷ்ணன் வசம் சென்றது.
தற்போது புலி படத்தின் மூலம் தென்னிந்தியப் படங்களுக்கு வருகை தந்திருக்கும் ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிகவும் வருத்தத்தில் உள்ளாராம்.
இந்த வருத்தத்தைப் போக்கும் முயற்சியாக இப்போது உருவாகி வரும் பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க விரும்புவதாக இயக்குநர் ராஜமௌலியிடம் கூறியிருக்கிறாராம்.
ஏற்கனவே படத்தின் பாத்திரங்கள் முதல் காட்சிகள் வரை பார்த்துப் பார்த்து வடிவமைத்து வைத்திருக்கும் ராஜமௌலி திடீரென இந்த பாகத்தில் ஒரு புது கேரக்டரோ அல்லது பழைய கேரக்டர்களில் மாற்றங்களோ செய்து ஸ்ரீதேவியை நடிக்கவைப்பாரா? என்கிற கேள்வி தற்போது திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கான விடையை ராஜமௌலி தான் சொல்லவேண்டும், ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைக்குமா? பார்க்கலாம்...
Post a Comment