ஹைதராபாத்: பாகுபலி படம் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் கடந்த ஜூலை மாதம் 10ம் தேதி வெளியானது. படம் பாக்ஸ் ஆபீஸை அடித்து துவைத்துள்ளது. இந்நிலையில் வெள்ளி விழா கொண்டாடிய பாகுபலி படம் சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் வெளியிடப்படும் என ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
சீனாவில் வரும் நவம்பர் மாதம் 5 ஆயிரம் ஸ்கிரீன்களில் பாகுபலியை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜமவுலி கூறுகையில்,
சீனா, கொரியா, ஜப்பான், பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வினியோகஸ்தர்கள் போன் மேல் போன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பாகுபலி சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்படும் என்றார்.
ரூ.250 கோடி பட்ஜெட்டில் எடுத்து தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆனது பாகுபலி. படம் இந்தியாவில் மட்டும் ரூ.430 கோடியும், வெளிநாடுகளில் ரூ.70 கோடியும் வசூல் செய்துள்ளது.
சீனா, கொரியா உள்ளிட்ட நாடுகளில் பாகுபலி ரூ.30 கோடி வசூல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment