சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்குகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.
அக்டோபர் 18 ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப் பதிவு மாலை 5 மணிவரை நடைபெற இருக்கின்றது.தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 3-ந் தேதி(சனிக்கிழமை) ஆகும்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் தேர்தலில் நடிகர் சரத்குமார் மற்றும் விஷால் ஆகியோர் தலைமையில் 2 அணிகள் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றனர்.
தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி காலை(ஞாயிறு) பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந்(வியாழக்கிழமை) தேதி வெளியிடப்படும்.
சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும் துணைத்தலைவர் பதவிக்கு சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு மறைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
விஷால் அணிசார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால் நிற்கிறார். நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ், அஜய்ரத்னம் போன்றோர் முக்கிய பதவிகளுக்கு நிறுத்தப்பட இருப்பதாக கூறுகின்றனர்.
எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வருவதால் 2 அணியினரும் தங்கள் அணிக்கு ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.
Post a Comment