திட்டமிட்டபடி பாயும் புலி படம் நாளை தமிழகம் மற்றும் உலகெங்கும் வெளியாகும் என நடிகரும் படத்தின் நாயகனுமான விஷால் கூறியுள்ளார்.
விஷால் - காஜல் அகர்வால் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் பாயும் புலி. இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை வெளியிட பெரும் தொகையை தங்களுக்கு தர வேண்டும் என்று செங்கல்பட்டு பகுதி திரையரங்க உரிமையாளர்களை வைத்து ரோகினி பன்னீர் செல்வம் என்பவர் மிரட்டுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
திரையுலகை அழிக்கும் தீய சக்தியாக பன்னீர் செல்வம் மற்றும் அவர் தலைமையில் இயங்கும் சிலர் செயல்படுவதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தீரும் வரை புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என்று நேற்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த சூழலில், திட்டமிட்டமிட்டபடி நாளை செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி படம் வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார்.
"மாதக் கணக்கில் சும்மா இருந்துவிட்டு, திடீரென ரிலீசுக்கு முந்தின நாள் படத்தை நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம்.. ஒரு ஏரியா மற்றும் சில தியேட்டர்களுக்காக ஏன் ரிலீசை தள்ளிப் போட வேண்டும்...
திட்டமிட்டபடி படத்தை நாளை ரிலீஸ் செய்வோம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் இருக்கும்," என்று ட்விட்டரில் அறிவித்துள்ளார் விஷால்.
அமெரிக்காவில் 22 நகரங்களில் உள்ள 40 க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், பிரிட்டனில் கணிசமான அரங்குகளிலும் படம் வெளியாகும் என்று விஷால் அறிவித்துள்ளார்.
கேரளாவில் 70 அரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம். தமிழகத்தில் 300 அரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகிறது.
Post a Comment