ஸ்ட்ராபெரி விமர்சனம்

|

Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: பா விஜய், சமுத்திரக்கனி, தேவயானி, தம்பி ராமய்யா, ஆவ்னி

Strawberry (U/A): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒளிப்பதிவு: மாறவர்மன்

இசை: தாஜ் நூர்

தயாரிப்பு - இயக்கம்: பா விஜய்

பாடலாசிரியராக அறிமுகமாகி, நடிகராக மாறி இப்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் பா விஜய்க்கு முதலில் வாழ்த்துகள்.

இயக்குநராக முதல் படம்... சில தடுமாற்றங்கள் தெரிந்தாலும் துணிச்சலான ஒரு கருத்தை, பலரும் சொல்லத் தடுமாறும் விஷயத்தை கையிலெடுத்ததற்காக பாராட்டுகள்.

தினம்தோறும் செய்தித் தாள்களில் பள்ளிக் குழந்தைகளின் பரிதாப மரணங்களைப் படித்துவிட்டுக் கடக்கிறோம். அந்த இழப்பு நமக்கு ஏற்படாத வரையில் அது வெறும் செய்திதானே! அந்த குழந்தைகள் இறப்பு வெறும் விபத்தால் நேர்ந்த மரணங்களா... அல்லது அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலைகளா...? யாரும் யோசிப்பதில்லை, குழந்தையைப் பறிகொடுத்தவர்களைத் தவிர!

Strawberry movie Review

காலையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு தேவதை மாதிரி பள்ளிக்குச் சென்ற ஒரு குழந்தை, மாலையில் கொடூரமாக சிதைந்து பொட்டலமாக வீடுவந்தால் எப்படியிருக்கும்? அப்படி ஒரு இழப்பைச் சந்தித்த பெற்றோரின் மனவலி, போராட்டம் ஒரு பக்கம், அந்த குழந்தை ஆவியாக வந்து தன் மரணத்துக்குக் காரணமானவனை பழிவாங்குவது சினிமாத்தனமான மறுபக்கம் என்று போகிறது ஸ்ட்ராபெரியின் கதை.

ஆவி, பழி வாங்கல் சமாச்சாரமின்றி இந்தக் கதையைச் சொல்லியிருந்தால் இன்னும் நல்ல படமாக வந்திருக்கும். ஆனால் வசூல், இன்றைய சினிமா ட்ரெண்ட் போன்றவற்றை மனதில் வைத்து இதனை ஒரு பேய்ப் படமாகக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது பா விஜய்.

Strawberry movie Review

ஆரம்ப காட்சிகள் சற்று மெதுவாகத்தான் நகர்கின்றன. ஆவியாக உடன் சுற்றும் குழந்தையுடன் தியேட்டருக்குப் போய் பேய்ப் படம் பார்ப்பது சுவாரஸ்யமான காட்சி.

பள்ளி நிர்வாகியை பழி தீர்க்க பள்ளிக் கூடத்தின் மீது பேய் நடந்தபடி திட்டமிடுவது போன்ற காட்சிகளை இன்னும் சிந்தித்து மெச்சூர்டாக உருவாக்கியிருக்கலாம். அந்த குழந்தைப் பேயின் பேச்சு கொஞ்சம் ஓவர்... சற்றே குறைத்திருக்கலாம்!

Strawberry movie Review

பா விஜய் இதில் டாக்சி ட்ரைவராக வருகிறார். வேஷம் ஓகே என்றாலும் நடிப்பை இன்னும் கொஞ்சம் 'பட்டி' பார்த்திருக்கலாம். சில காட்சிகளில் செயற்கைத்தனம். வசனகர்த்தாவும் இவர்தான். சமயத்தில் வசனம் கவிதையாகவே வருகிறது... பழக்க தோசத்தை அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாதே!

ஆவிகளுடன் பேசும் நாயகியாக வரும் ஆவ்னியை கவர்ச்சிப் பதுமையாக நடமாட விட்டிருக்கிறார்கள்.

Strawberry movie Review

சமுத்திரக்கனி வழக்கம்போல பிரமாதமான நடிப்பைத் தந்திருக்கிறார். 200 சீட்டுக்கு எதுக்குடா 20000 அப்ளிகேஷன் விக்கிறீங்க? அரசுப் பள்ளியில் படிச்சா என்னடா கெட்டுப் போச்சு? என்றெல்லாம் அவர் பேசும் இடங்களில் கனியின் நடிப்பும் பா விஜய்யின் வசனமும் டாப்!

தேவயானி, தம்பி ராமய்யா, ஜோ மல்லூரி தங்கள் வேடங்களை உணர்ந்து நடித்துள்ளனர். ஜோ மல்லூரியின் ஒரிஜினல் குரலே பிரமாதமாக இருக்கும். டப்பிங் ரொம்பவே படுத்துகிறது. அந்த வில்லன் நடிப்பு ரொம்பவே செயற்கை.

Strawberry movie Review

தாஜ் நூரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசை படத்தை வேகப்படுத்திக் காட்டுகிறது.

பல படைப்பாளிகளும் மறந்துவிட்ட, ஆனால் சமூகத்தின் பெரும் நோயாக தனியார் பள்ளிகளின் கொள்ளையை, அலட்சியக் கொலைகளைப் படமாக எடுத்த ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்!

 

Post a Comment