சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கென நடிப்புப் பயிற்சிப் பட்டறை தொடங்கியுள்ளனர் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுசீந்திரன்.
சுசீந்திரனும்-விஷாலும் இணைந்து ‘பாண்டியநாடு' படத்தில் பணியாற்றினர். அந்த படம் பெரிய வெற்றி பெறவே, தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ‘பாயும் புலி' படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் செப்டம்பர் 4-ந் தேதி வெளியாகிறது.
சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விஷால், பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டார். மேலும், பல சமுக சேவை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவும் முடிவு செய்துள்ளார்.
சென்னையில் உள்ள எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளின் ஆதரவுடன் இணைந்து கால்நடை பாதுகாப்பு மற்றும் பசுக்கொலை தடுப்பு குழு (Save cattle stop & killing cows) என்னும் பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும் பசுமைச் சூழல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் எம்.ஒ.பி கல்லூரியின் வளாகத்தில் ஆறு மரக் கன்றுகளையும் அவர் நட்டார்.
பிறகு நடிகர் விஷால் பேசும்போது, "நான் இதுபோன்ற நல்ல விஷயங்கள் செய்வதை யாரேனும் விளம்பரத்துக்காக செய்கிறேன் என்று கூறினால் அது தவறு. நான் இங்கு மாணவர்களோடு இணைந்து கால்நடைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் போது நிச்சயம் மக்களை அது எளிதாக சென்றடையும்.
இதை பார்த்து பலர் இந்த அமைப்போடு இணைந்து இந்த நல்ல நோக்கத்துக்காக பணியாற்றுவார்கள் என்பதுதான் காரணம்.
நானும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து இயக்கம் மற்றும் நடிப்புக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளுக்காக வழங்கவுள்ளோம்," என்றார்.
Post a Comment