சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்தில் கடும் எதிர்ப்பை வெளிபடுத்தியிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
நடிகர் ரஜினிகாந்த் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்று வெளியான தகவலையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக இந்து முன்னணி அமைப்பு மற்றும் தமிழக பா.ஜ.க ஆகிய இரண்டும் கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அதேபோல் முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா' எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் அறிவித்தார்.
அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களும் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கடும் எதிர்ப்பை சமீபத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
சமீபத்தில் முன்னணி ஆங்கில நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் " நமது நாடு சகிப்புத்தன்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறைச்சிக்கு தடை விதித்தீர்கள், வயது வந்தவர்களுக்கான படங்களுக்கு தடை விதித்தீர்கள்.
தற்போது இந்த விவகாரங்களிலும் தடை விதிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள், ஓட்டுப் போட்டவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லையா?
இப்படியே சென்றால் விரைவில் நீர்க்குமிழி வெடித்து விடும்" என்று பொங்கியெழுந்து இருக்கிறார். வேறு எந்த சக நடிகர்களும் இவ்விரு விவகாரங்களிலும் கருத்துக்கள் எதையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment