தனி ஒருவன் தந்திருக்கும் வெற்றி இயக்குநர் மோகன் ராஜாவுக்கும் அவர் தம்பி ஜெயம் ரவிக்கும் தந்திருக்கும் தன்னம்பிக்கையும் பெருமையும் கொஞ்சமல்ல.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்தும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து அரங்குகளிலுமே ஹவுஸ்புல்.
வசூல், தரம் என அனைத்திலுமே இந்தப் படம் தனி சரித்திரம் படைத்து வருகிறது. இந்த பிரமாண்ட வெற்றிக்கு நன்றி சொல்ல மீடியாவைச் சந்தித்தபோது அண்ணன், தம்பி இருவருமே பேச முடியாமல் நா தழுதழுத்தனர்.
மோகன் ராஜா பேசுகையில், "என்னிடம் வரும் ஹீரோக்கள் அனைவருமே ரீமேக் படம் எடுக்குறீங்க என்றால் நடிக்கத் தயார் என்றே கூறினார்கள். இத்தனை படங்கள் எடுத்தும் இயக்குநராக என்னை யாரும் நம்பவில்லை. ஒரு கட்டத்தில் நான் யார்? இந்த சினிமாவில் இருக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் அளவுக்கு மனநெருக்கடிக்கு ஆளானேன்.
நான் புத்திசாலியெல்லாம் கிடையாது. என்னுடைய உழைப்பை மட்டும்தான் இந்தப் படத்திற்கு விதைத்தேன். அதன் அறுவடையாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிக்கு இரு முக்கிய காரணங்கள். ஒன்று கல்பாத்தி அகோரம் என் மேல் நம்பிக்கை வைத்து என் ஒரிஜினல் கதையைத்தான் படமாக்குவேன் என்று உறுதியாக நின்றது.
அடுத்து என் தம்பி ரவி என்னை நம்பி, கதை கூட கேட்காமல் முழுசாய் என்னிடம் ஒப்படைத்தது. அவன் இல்லாவிட்டால் இந்தப் படம் இல்லை. நன்றி ரவி," என்றபோது, அண்ணனும் தம்பியும் நெகிழ்ந்து கலங்கி, பார்வையாளர்களையும் கலங்க வைத்தனர்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய ஜெயம்ரவி, "என்னோட வெற்றியைப் பார்த்து தான் அண்ணன் சந்தோஷப்பட்டிருக்கிறார். இப்போ அவரோட வெற்றியைப் பார்த்து நான் சந்தோசப்படுகிறேன்.
ஜெயம் படம் என்னுடைய நுழைவுச் சீட்டு மாதிரி. தனி ஒருவன் என் நெஞ்சில் குத்திய பச்சை மாதிரி. என் உயிர், உடல் உள்ளவரைக்கும் என் நெஞ்சிலேயே இருக்கும். என் அண்ணன் ரொம்ப சீரியஸான பட இயக்குநர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். அவரை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.
இந்தப் படத்தில் உடன் நடித்த நடிகர்கள் முதல் படத்திற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி," என்றார்.
Post a Comment