சென்னை: விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நானும் ரவுடிதான். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
தற்போது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக விஜய் சேதுபதியின் 10 வயது மகன் சூர்யா சேதுபதி இந்தப் படத்தில் நடித்திருப்பதாக கூறுகின்றனர்.
இந்தப் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடிக்க ஒரு சிறுவனைத் தேடி யாரும் பொருத்தமாக இல்லாததால் விஜய் சேதுபதியின் நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
இதனை விஜய் சேதுபதியும் ஒப்புக் கொண்டிருக்கிறார் " நானும் ரவுடிதான் படத்தில் எனது மகன் சூர்யா சேதுபதி நடித்திருக்கிறார். ஆனால் அவர் எந்த மாதிரியான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை நான் கூற மாட்டேன்.
அது என்ன வேடம் என்பதை நீங்களே திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜயின் மகன் சஞ்சய் அவர் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார்.
மேலும் விக்ரமின் மகன் துருவ் தற்போது நடிகராக விரைவில் அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறைக்கு வழி விடுகிறதா கோடம்பாக்கம்?
Post a Comment