சென்னை: ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த இறைவி திரைப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தான் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் தற்போது அடுத்தபடியாக இறைவியைக் கையில் எடுத்திருக்கிறார்.
தன் முதல் பட நாயகனான விஜய் சேதுபதியையும் இரண்டாவது படத்தில் அசால்ட் சேதுவாக மிரட்டிய பாபி சிம்ஹாவையும் இந்தப் படத்தில் முக்கியமான வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார் கார்த்திக்.
மேலும் எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி மற்றும் அஞ்சலி போன்றோரும் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது மற்றும் பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களின் வெற்றி போன்ற காரணங்களால் இறைவி படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகியிருக்கிறது.
தற்போது கிடைத்த தகவல்களின் படி இன்னும் 2 வாரங்கள் படப்பிடிப்புடன் இறைவி திரைப்படத்தின் மொத்த சூட்டிங்கும் முடிவிற்கு வந்து விடும் என்று கூறுகின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப் படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இறைவி தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளுமா? பார்க்கலாம்.
Post a Comment