மதுரை: சாதி, பணத்தால் நடிகர் சங்கத்தை பிளவுபடுத்த நினைக்கின்றனர் என்று நடிகர் சங்க தலைவர் சரத்குமார் குற்றம்சாட்டினார்.
நடிகர் சங்கத் தேர்தலையொட்டி சரத்குமார், ராதாரவி, ராம்கி, ராதிகா, பசி சத்யா, பாத்திமா பாபு உள்ளிட்டோர் மதுரையில் நாடக நடிகர்களை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதற்கு பல முறை விளக்கம் அளித்த போதும் புரிதல் இல்லாமல் இன்னும் அதே புகாரைக் கூறி வருகின்றனர். கட்டடம் தொடர்பான ஒப்பந்தம் வெளிப்படையாகவே போடப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டுக்குப் பிறகு இப்போது புகார் கூறுகின்றனர்.
இப்போதைய நிர்வாகிகள் மீது எவ்வித குற்றச்சாட்டும் சொல்ல முடியாத நிலையில் தற்போது பணம், சாதியின் பெயரால் பிளவுபடுத்த நினைக்கின்றனர். நான் உள்பட சங்க நிர்வாகிகள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்த போதும் இதுவரை சங்க நடவடிக்கைகளில் அரசியலைப் புகுத்தியது கிடையாது. ஆனால், சங்கப் பிரச்னையில் தேவையின்றி அரசியலை புகுத்துகின்றனர்.
விஷால், எஸ்வி சேகர் மீது மான நஷ்ட வழக்கு
சங்கக் கட்டடம் தொடர்பாக விளக்கம் அளித்த பிறகும் குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதால், நடிகர் விஷால் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். எங்களது தலைமையில் எந்தெந்த பதவிக்கு யார் போட்டியிட உள்ளனர் என்பதை செப்.30ஆம் தேதிக்குள் அறிவிக்க உள்ளோம்," என்றார்.
Post a Comment