பெண்கள் மட்டுமே நடிக்கும் சில்லு... நாடகம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

|

முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் கால் பதிக்கிறது ராம நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் நாடகத்துக்கு சில்லு என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரை உலகில் நன்கு பரிச்சயமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்போது நாடகத் தயாரிப்பிலும் கால் பதிக்கிறது. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி ராமசாமியும் அவரது மனைவி ஹேமா ருக்மணியும், நாடகங்களுக்கு மறுமலர்ச்சி கொடுக்க வேண்டும், மேலை நாடுகளில் நாடகங்கள் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுவது போல நமது கலாச்சாரத்துடன் இணைந்து தரமான நாடகங்களை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புது முயற்சியில் களமிறங்கியிருக்கிறார்கள்.

Thenandal films enters stage drama production

இவர்களது முதல் தயாரிப்பாக ‘சில்லு' என்ற நவீன அறிவியல் புனைவு நாடகத்தை சென்னை நாடக ஆர்வலர்களுக்கு பரிச்சயமான ஸ்ரத்தா அமைப்பு, மற்றும் அமெரிக்க விரிகுடாப் பகுதி நாடகக் குழுவான க்ரியாவுடன் இணைந்து தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க இருக்கிறது.

ஸ்ரத்தா இதுவரை 18 நாடகங்களை மேடையேற்றியுள்ளது. ஸ்ரத்தாவின் குறிக்கோள், தரமான எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்தவது. க்ரியா இதுவரை 9 முழுநீள நாடகங்களை அமெரிக்காவின் பல இடங்கள் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் மேடையேற்றியுள்ளது.

எதிர் காலத்தில் நடப்பதாக இருக்கும் ‘சில்லு' அறிவியல் புனைவு கதையை தமிழ் வாசகர்களுக்கு நன்கு பரிச்சமாயன பிரபல எழுத்தாளர் இரா.முருகன் எழுதியுள்ளார். இவர் நாடகங்கள் மட்டுமல்லாமல் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகளையும் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனின் ‘உன்னை போல் ஒருவன்' மற்றும் ‘பில்லா 2' ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.

‘சில்லு' நாடகத்தை அமெரிக்காவை சேர்ந்த க்ரியாவின் தீபா ராமானுஜம் இயக்க உள்ளார். இவர், கே.பாலச்சந்தரின் ‘பிரேமி' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதுவரை 9 முழு நீள நாடகங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘இது நம்ம ஆளு', சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்', விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்' ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

முத்திரை பதித்து வரும் எழுத்தாளர், கவனத்துக்குரிய இயக்குனர், ரசிகர்களுக்கு பரிச்சயமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் - க்ரியா - ஸ்ரத்தா குழுக்களின் கூட்டணி என ‘சில்லு' நாடகத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

புதிய நாடக முயற்சி ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் விளம்பரப் போஸ்டரை ஒரு முன்னணி நடிகர் வெளியிடுவது இதுவே முதல் முறை. விஜய் சேதுபதி ‘சில்லு' நாடகத்தின் விளம்பரப் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியிட்டார்.

‘சில்லு' நாடகத்துக்கு பிரபல திரைப்பட கலை இயக்குனர் வி.செல்வக்குமார் மேடையை வடிவமைக்க உள்ளார். பல ஆங்கில நாடகங்களுக்கு இசை அமைத்த அனுபவம் கொண்டவரான அமெரிக்காவை சேர்ந்த கவிதா பாளிகா இந்த நாடகத்திற்கு இசையமைக்கிறார். இவர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர். இவர்களோடு ப்ரீதிகாந்தன் ஆடை வடிவமைக்க, 25 நடிகர்கள் இதில் கதாபாத்திரங்களை ஏற்க உள்ளனர். இந்த நடிகர்களின் சராசரி வயது 25. இவர்களில் சிலர் முதன்முறையாக தமிழ் நாடகத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் அடுத்த முயற்சியாக, கார்த்திக் ராஜாவுடன் இணைந்து ‘பட்டணத்தில் பூதம்' என்கிற நாடகத்தினை தயாரிக்கிறது. அந்த குழந்தைகளுக்கான நாடகத்தில், பல திரைப்பட நடிகர்களும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரைப்படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் மேடை நாடகத்தில் பங்கேற்க வருவதால் தமிழ் நாடகத்தின் தரம் கூடிய விரைவில் உயரும் என்பதில் சந்தேகமே இல்லை.

‘சில்லு' நாடகம் செப்டம்பர் 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் மாலை 7 மணிக்கு சென்னை நாரத கான சபாவில் நடைபெறுகிறது. 12-ம் தேதி திரை உலக சிறப்பு விருந்தினர்களுக்காக 4 மணி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘சில்லு' நாடகம் நவம்பர் 22-ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மேடையேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment