ஹீரோ, வில்லன், துண்டு துக்கடா என எந்த வேடமாக இருந்தாலும் தயங்காமல் நாசரைக் கூப்பிடலாம். எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க மறுக்க மாட்டார். அது தன் தொழில் மீது அவர் கொண்டிருக்கும் காதல். திரைத்துறையில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர் நிலைப்பாடு.
இப்போது ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு குற்றம் நடந்தது என்ன என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் டிவி யில் விஜே வாக இருக்கிறார். மற்றும் ஸ்ரீதேஜா, பாலு, இருவரும் விக்னேஷ் கார்த்திக்குடன் இன்னைந்து நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாசர் நடிக்கிறார்.
நாயகிகளாக பிரியா, ஊர்மிளா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜி.வி.பெருமாள், ரவிபிரசாத் ஆகியோரும் நடிக்கிறார்கள். நரேஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் சசிதர். இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
படம் குறித்து அவர் கூறுகையில், "தென்றலாக வீசும் காற்று புயலாகவும், அமைதியான நடுக்கடல் சுனாமியாகவும் மாறுவதைப் போல மென்மையான குணாதிசயம் கொண்ட ஒரு பெண் எப்படி அதிபயங்கர குணம் கொண்டவளாக மாறுகிறாள் என்பதுதான் கதை," என்றார்.
Post a Comment