ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை உரிமை வழக்கில் ஷங்கர் தரப்பு ஆஜராகத் தவறியதால், மனுதாரர் தந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை முடித்துவிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எந்திரன் படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆரூர் தமிழ் நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் பி.டி.பெருமாள், எல்.சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
ஆனால் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரிடம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும். மனுதாரர் தரப்பு ஆதாரங்களை பதிவு செய்ய ‘மாஸ்டர்' கோர்ட்டுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. மாஸ்டர் கோர்ட்டு நீதிபதி 4 வாரங்களுக்குள் பதிவு செய்யவேண்டும்," என்று உத்தரவிட்டார்.
இதனால் வழக்கு மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனுக்கு சாதகமாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Post a Comment