சென்னை: பாட்ஷா படத்தை கபாலி மிஞ்சுமா என பலர் என்னிடம் கேட்கிறார்கள். ஒரு பாட்ஷாதான். அதை மிஞ்ச எந்தப் படமும் இல்லை என்றார் ரஜினிகாந்த்.
தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் எம் வீரப்பனின் 90வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஆர்எம் வீரப்பன் தயாரிச்ச பாட்ஷா படத்தோட 125 வது நாள் விழாவில் கலந்துகிட்டேன். அப்போ ஆர்எம்வீ அமைச்சராக இருந்தார். அந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்எம்வீக்கு பதவி போய்விட்டது. அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணேன். வருத்தத்தைத் தெரிவிச்சப்ப, அவர் சிரிச்சிக்கிட்டே,
'வருத்தப்படாதீங்க.. இது காலத்தின் கட்டாயம்'-னு சொன்னார்.
ஆர்எம் வீரப்பன் சார் ஒரு முறை கூட ஆஸ்பிடலுக்கு போனதே இல்லைனு சொல்லுவாங்க. ஆஸ்பிடலுக்குப் போன வேதனையை அனுபவிச்சவன் நான். தயவு செய்து யாரும் ஆஸ்பிடலுக்கு போகாத அளவுக்கு உடம்பை வச்சிக்கங்க. 50 வயசுக்கு மேல இருக்கிறவங்க தினமும் எக்ஸர்ஸைஸ் பண்ணுங்க...!
என்கிட்ட பலர் இப்போ நான் நடிக்கிற கபாலி, பாட்ஷாவை மிஞ்சுமான்னு கேட்கிறாங்க. பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. ஒரு பாட்ஷாதான்," என்றார்.
Post a Comment