அஞ்சுக்கு ஒண்ணு படத்தை வெளிவராமல் விட மாட்டோம் என்று கூறியுள்ள கட்டட சங்க தொழிலாளர் தலைவர் பொன் குமாருக்கு படத்தின் இயக்குநர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ஆர்வியார், தயாரிப்பாளர் எவர்கிரீன் எஸ் சண்முகம் கூறுகையில், "ஒரு நாளிதழில் கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் பொன் குமார் பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த 'அஞ்சுக்கு ஒண்ணு' திரைப்படத்தில் சித்தாள் பெண்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதாக தவறான தகவலை பத்திரிக்கை வாயிலாக தெரியப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
மேலும் இப்படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழுவினரால் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை நீக்கச் சொல்வதற்கு பொன்குமாருக்கு என்ன உரிமை உள்ளது?
அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்குமாயின் பொன்குமார் படத்தின் தயாரிப்பாளரையோ அல்லது இயக்குநரையோ தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். அல்லது திரைப்பட சங்கத்தையோ, இயக்குநர் சங்கத்தையோ தொடர்புகொண்டு நியாயத்தைக் கேட்டிருக்கலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு பத்திரிகை வாயிலாக திரைப்படத்தை விமர்சிப்பதற்கும், தடைசெய்யக் கோருவதற்கும் இவர் யார்? இதனால் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை பொன்குமார் ஏற்றுக் கொள்வாரா? எதற்காக பொய்யான விமர்சனத்தை வெளியிட வேண்டும்?
இத்திரைப்படம் வெளியிடுவதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கையில் இவருடைய விளம்பரத்தால் வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பொன்குமார் இப்படி ஒரு விமர்சனத்தை வைக்க என்ன காரணம். சுய விளம்பத்திற்காக திரைப்படத்தை விமர்சிக்கிறாரா? இல்லை தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயலுகிறாரா? இப்படியே ஒவ்வொரு இயக்கமும் காரணமே இல்லாமல் போர்க்கொடி தூக்கினால் திரைப்படத்துறையின் நிலை என்னாவது? திரைப்படத் துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை என்ன? இத்தொழிலை நம்பி பணம் முதலீடு செய்யும் முதலாளியின் நிலை என்ன?," என கேள்வி எழுப்பினர்.
Post a Comment