பாயும் புலி விமர்சனம்

|

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: விஷால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், சூரி, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், ஆர்கே

Paayum Puli (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

இசை: டி இமான்

தயாரிப்பு: எஸ் மதன்

இயக்கம்: சுசீந்திரன்

இன்னுமொரு தங்கப் பதக்கம் டைப் கதை. மதுரை எப்பவோ நவீனத்துக்கு மாறிவிட்டாலும் தமிழ் சினிமா அதை இன்னும் ரவுடியிசம், கொலை கொள்ளையிலிருந்து விடுவிக்காது போலிருக்கிறது!

மதுரையில் கொலை, மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கும்பலை போலீசார் சுற்றி வளைக்கும்போது ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்படுகிறார். அவரைச் சுட்டுக் கொன்ற தாதா தானாகவே போய் சரணடைகிறார். ஒரு போலீஸ்காரனைக் கொன்ற தாதாவையும் அவன் கும்பலையும் எப்படி விட்டு வைக்கக் கூடாது என்பதற்காக, திருச்சியில் பணியாற்றும் விஷாலை, அவரது சொந்த ஊரான மதுரைக்கு அன்டர்கவர் ஆபரேஷனுக்காக அனுப்புகிறது காவல்துறை. வந்த உடனே, சாலையைக் கடக்கவும், யு டர்ன் அடிக்கவும் பயப்படும் காஜல் அகர்வால் கண்ணில் பட, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் விஷால்.

Paayum Puli Review

மதுரையில் ஆதிக்கம் செலுத்தும் அத்தனை ரவுடிகளையும் பொட்டு பொட்டென்று சுட்டுத் தள்ளுகிறார் விஷால். மெயின் தாதாவான பவானியைப் போட்டுத் தள்ளும்போது, 'எனக்கும் மேல ஒருத்தர் இருக்கார்..' என்று கூறவிட்டு சாகிறான்.

யார் அந்த தாதா... அவனை விஷால் எப்படி ஒழித்தார்? என்பது மீதி.

விஷாலுக்கென்றே அளவெடுத்துத் தைத்த மாதிரியான போலீஸ் வேடம். மனிதர் சின்ன அலட்டல் கூட இல்லாமல் பிறவி போலீஸ்காரர் மாதிரி நடித்திருக்கிறார். மதுரையின் மொத்த குற்றங்களுக்கும் பின்னணி யார் என்பதைக் கண்டுபிடிக்கும் விதமும், கண்டுபிடித்தபிறகு கலங்கித் தவிப்பதும் நிறைவான நடிப்பு.

Paayum Puli Review

துப்பாக்கி முனையில் காஜல் அகர்வாலை ஐ லவ் யூ சொல்ல வைக்கும் காட்சி புதுசு.

முந்தைய இரு படங்களைவிட இதில் காஜல் அகர்வால் பார்க்க அழகாக இருக்கிறார். அவருக்கான நடனங்களை இன்னும் கூட அழகான மூவ்மென்ட்டுகளுடன் வைத்திருக்கலாம். ஏதோ வாங்கின சம்பளத்துக்கு ஆடின மாதிரி இருந்தது.

ஹெல்மெட்டோடு குளிக்கப் போய் மனைவியிடம் மாட்டிக் கொள்ளும் இடத்தில் மட்டும் சூரியின் காமெடி ரசிக்க வைக்கிறது.

ஹீரோவுக்கு இணையான வேடம். கலக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. அமைச்சராக வரும் ஆர்கே, தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ஆனந்த்ராஜ், வேல ராமமூர்த்தி என அனைவரும் மிகையற்ற நடிப்பைத் தந்துள்ளனர்.

Paayum Puli Review

இரண்டு மணி பத்து நிமிடமே ஓடும் படத்தில் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் நல்ல விறுவிறுப்பு. சமுத்திரக் கனிக்கும் விஷாலுக்குமான அந்த துரத்தலைப் படமாக்கிய வேல்ராஜைப் பாராட்ட வேண்டும்.

இமானின் இசையில் சிலுக்கு மரமே, மருதைக்காரி.. பாடல்கள் கேட்கும்படி உள்ளன. விஷால் - காஜல் காதல் காட்சிகளில் ஜில்லா பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இமான்.

Paayum Puli Review

சுசீந்திரன் இயக்கியுள்ள முதல் போலீஸ் கதை. இடைவேளையில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட்டே கதையின் முடவை யூகிக்க வைத்துவிடுகிறது. அதை க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்திருந்தால் படம் வேறு ரேஞ்சில் இருந்திருக்கும்!

 

Post a Comment