மும்பை: முகமத் என்ற பெயரில் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் ஆகியோகுக்கு ஃபத்வா விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு அமைப்பான ரஸாக் அகாடமி இந்த ஃபத்வாவை அறிவித்துள்ளது.
மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத் - மெஸஞ்சர் ஆப் காட் படம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்துள்ள இந்த அமைப்பு, எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கடிதமும் எழுதியுள்ளது இந்த அமைப்பு.
அந்த ஃபத்வாவில், "நபிகளின் வார்த்தைதான் அனைத்தும். அவரின் உருவமோ, காட்சியோ வைத்திருக்கக் கூடாது என்கிறது இஸ்லாத். அதற்கு எதிரானது இந்தப் படம்.
இஸ்லாத்தை கேலி செய்யும் விதத்தில் உள்ள இந்தப் படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், பிற மதக் கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர்.
இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ ஆர் ரஹ்மானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறியிருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் கல்மாவை மீண்டும் படிக்க வேண்டும். தங்களின் திருமணத்தை மீண்டும் நடத்தி அவர்கள் புனிதப்படுத்திக் கொள்ளவேண்டும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment