விமலா ராமனுடன் மோதிய ப்ரியாமணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள். சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம். க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி. “நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை… நானும் விமலா ராமனு ஒண்ணா… நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?”, என்று ப்ரியாமணி எகிற “பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்…!” என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார் விமலா ராமன்.


Source: Dinakaran

 

சிறந்த கட்டுடல் கொண்ட நாயகியாக ஜெனிபர் அனிஸ்டன் தேர்வு

Jennifer Aniston
சிறந்த உடலமைப்புடன் கூடியவராக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த முக அமைப்பு, சிறந்த சிரிப்பு, சிறந்த அழகி, சிறந்த கால் அழகி, சிறந்த அசிங்கமான முகம் என்று ஏகப்பட்ட சர்வேக்களையும், கருத்துக் கணிப்புளையும் நடத்துவது மேற்கில் சகஜம். அந்த வரிசையில் தற்போது சிறந்த உடல் கட்டுடைய அழகி யார் என்பதை ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை அறிவித்துள்ளனர்.

இதில் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் முதலிடத்தைப் பிடித்து சிறந்த கட்டுடல் நாயகியாக உருவெடுத்துள்ளார். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு ஓட்டை இவர் பெற்றுள்ளார்.

35 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டனர். இக்கணிப்பில், மர்லின் மன்றோ, செரில் கோல், ஹாலி பெர்ரி ஆகியோர் எல்லாம் ஜெனிபருக்குப் பின்னால்தான் வந்துள்ளனர்.

தனது உடலை சிறப்பாக கவனித்துக் கொள்வதும், பாரமரிப்பதுமே ஜெனிபருக்கு சிறந்த உடல் கட்டு இருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.


 

பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா? அன்புமணி சவால்!

Anbumani
மேட்டூர்: நிஜத்தில் சண்டை போடவே தெரியாத ஒரு நோஞ்சான் நடிகர் பத்து பேரை போட்டு அடிக்கிறார். அவர் தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதத் தயாரா என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

மேட்டூர், மேச்சேரியில் பாமக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில், சினிமாக்காரர்களை கடுமையாக சாடினார். குறிப்பாக ஹீரோக்களை விளாசித் தள்ளினார்.

கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களால் சமுதாயம் பாதிக்கிறது. இளைஞர்களை பார்த்து எந்த நடிகரோ, கட்சித் தலைவரோ மது அருந்தாதீர்கள், புகை பிடிக்காதீர்கள், திரைப்படம் பார்த்து கெட்டு போகாதீர்கள் என்று சொன்னது உண்டா?

நல்ல திரைப்படங்கள் இப்போது வருவதில்லை. குத்துப்பாட்டு, அரைகுறை ஆடைகளோடு, ஆடல்- பாடல்களுடன் காட்சிகள் அமைகின்றன.

தொலைக்காட்சி தொடர்களில் மாமியார் கொடுமை, மருமகள், மாமியாரை கொல்வது, உள்பட குடும்ப வன்முறை தொடர்கள்தான் வருகின்றன. இவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

நடிகர், நடிகையரின் கட்சியை நம்பி சிலர் ஓடுகிறார்கள். தமிழகத்தில் 43 ஆண்டுகளாக திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு ஆளும் திறமை தகுதி இல்லையா?

கையில் கற்பூரம் ஏந்துகிறார்கள். அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்கபிரதட்சணம் செய்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். முட்டிபோட்டு மலை ஏறுகிறார்கள்.

கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். நடிகர் சம்பாதிக்க இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு சென்று விடு கிறார்கள். திரைப்படம் ஒரு பொழுது போக்குதான். அதில் வரும் காட்சி நிஜம் அல்ல.

ஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போட தெரியாது. உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி.


 

‘தளபதி’ பாதிப்பில் பேசியதுதான் அந்த ‘நண்பேன்டா’ வசனம்! – சந்தானம்

Santhanam
பாஸ் என்கிற பாஸ்கரனின் இரண்டாவது ஹீரோ எனும் அளவுக்கு காமெடியில் கலக்கியிருந்தவர் சந்தானம். கவுண்டரின் ஸ்டைலில் அவர் அடித்த கமெண்டுகளுக்கு தியேட்டர் கூரையே அதிருமளவுக்கு விசிலும் கைத்தட்டலும் பறக்கிறது. இந்த எந்திரன் சுனாமியிலும் சற்று தாக்குப் பிடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன்தான். இதற்கு சந்தானம் – ஆர்யா கூட்டணியின் காமெடி சரவெடியே காரணம்.

இந்தப் படத்தில் வரும் நண்பேன்டா வசனம் படு பாப்புலர். ஆனால் இந்த ஒற்றைச் சொல்லை, தளபதி படத்தில் மம்முட்டியிடம் ரஜினி சொல்வாரே..’நீ என் நண்பேன்டா’ என்று.. அந்தக் காட்சி பாதிப்பில்தான் வைத்ததாகச் சொல்கிறார் சந்தானம்.

“சின்ன வயசிலேருந்தே நான் தலைவர் ரஜினி ஃபேன். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதுகூட ரஜினி சார் ஸ்டைலில்தான் ஹேர் கட் பண்ணிக்குவேன். இதுக்காக எங்க பிடி மாஸ்டர்கிட்ட வாங்கி அடி கொஞ்சமல்ல. ஆனாலும் யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்.

நான் நடிக்க வந்த பிறகு, எப்படியாவது அவர்கூட நடிக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது குசேலன்ல நிறைவேறினாலும், அவரோட வர்ற மாதிரி சீன் எதுவும் அமையல. இப்போ எந்திரன்ல அந்த வாய்ப்பு கிடைச்சது.

சிலர் சொல்றாங்க, எனக்கும் கருணாசுக்கும் படத்தில ஸ்கோப் இல்லையேன்னு. இந்தக் கதையில எங்களுக்கு இந்த அளவுதான் வேலைன்னு தெரியும். இன்னொன்னு இது ரஜினி சார் படம். அவர் கூட நடிக்கணும்ங்கிறதுதான் எங்க ரெண்டு பேருக்குமே பிரதான நோக்கமா இருந்தது. ஒரு ரசிகனாத்தான் நான் ரஜினி சார்கூட இருந்தேன். தூரத்திலேருந்து பாத்துக்கிட்டிருக்கிற ரசிகன் ஒருத்தனுக்கு, திடீர்னு 30 நாள் ரஜினி சார் கூடவே இருக்கிற அதிர்ஷ்டம் கிடைச்சா…? அதை விவரிக்க வார்த்தை இல்லைங்க.

செட்ல எங்க கூடத்தான் சாப்பிட்டார் ரஜினி சார். அவர் நினைச்சிருந்தா உலகத்திலேயே காஸ்ட்லியான கேரவன்ல சொகுசா இருந்திருக்க முடியும். ஆனா ஒரு நாள்கூட அவர் கேரவன் கேட்கல. அவரோட சீன் முடிஞ்சதும், என்கிட்டயும் கருணாஸ் கிட்டேயும் ஜாலியா சிரிச்சிப் பேசிக்கிட்டு, எங்களோட எதிர்காலத்துக்கான யோசனைகளை சொல்லி…. சான்ஸே இல்ல சார். இப்ப நினைச்சாலும் நெகிழ்ச்சியா இருக்கு. அவர் சினிமா சூப்பர் ஸ்டார் இல்ல. நிஜ சூப்பர் ஸ்டார்…,” என்றார்.



Source: dinakaran-kolly

 

பாலா-மணிரத்னத்துக்கு தங்க அடையாள அட்டை...வழங்கினார் ரஜினி!

Mani Rathnam and Bala
இயக்கியது நான்கே படங்கள் என்றாலும், தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டுபோனவர் இயக்குநர் பாலா. அவரது பங்களிப்பை மெச்சும் வகையில் தங்க அடையாள அட்டை வழங்கியது இயக்குநர்கள் சங்கம்.

சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த இயக்குநர்கள் சங்க 40வது ஆண்டுவிழாவில் இந்த அட்டையை வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பாலாவைத் தவிர, தமிழ் சினிமாவுக்கு தேசிய அளவில் விருதுகள் பெற்றுத் தந்த மணிரத்னம், அகத்தியன் ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டும் வகையில் தங்க அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தங்களுக்கு அளிக்கப்பட்டஇந்த கவுரவத்துக்காக நன்றியை தெரிவித்துக் கொண்டனர் மூன்று இயக்குநர்களும்.

 

இயக்குனர்கள் சங்கத்துக்கு வயது 40 : திரையுலகம் கொண்டாட்டம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க 40-வது ஆண்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. இயக்குனர்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சியை மத்திய அமைச்சர் நெப்போலியன் திறந்து வைத்தார். பிறகு இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கே.பாலசந்தர், பாரதிராஜா முன்னிலை வகித்தனர். இயக்குனர்கள் ராம நாராயணன், கே.விஸ்வநாத், நாகபரணா, ஹரிஹரன் தலைமை வகித்தனர். எஸ்.பி.முத்துராமன் வரவேற்றார். இசை நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நெப்போலியன் பாட்டுப் பாடி, தொடங்கி வைத்தார். மலையாள நடிகர் மம்மூட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சரத்குமார், நடிகை சந்தியா மற்றும் அனுராதா ஸ்ரீராம், திப்பு, சின்மயி, சுசித்ரா, மாலதி, ரஞ்சித் உட்பட பல பாடகர், பாடகிகள் பாடினர். இசை அமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், தேவா, சபேஷ்-முரளி, யுவன்சங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஆண்டனி, தினா, கார்த்திக் ராஜா உட்பட பலர் இசை அமைத்தனர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது. இதில், வெளிநாட்டு லேசர் நடனம் நடைபெற்றது. பின்னர் பாரம்பரிய இசையான தப்பாட்டம், களரி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாலசந்தர், பாரதிராஜா படங்களின் பாடல்களுக்கு நடிகைகள் தேஜாஸ்ரீ, அமலா பால், ராம்ஜி, சஞ்சீவ், சுஜா, சஞ்சனா சிங், தேவயானி, ரோஜா, ராஜ்கபூர், ரமேஷ்கண்ணா, பப்லு உட்பட பலர் ஆடினர். சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.சி, டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ஆர்த்தி மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிங்கப்புலி, மயில்சாமி, சித்ரா லட்சுமணன், இளவரசு நடித்த காமெடி நாடகம் இடம்பெற்றது. பின்னர், காயத்ரி ரகுராம் குழுவினரின் நடனம் இடம்பெற்றது.

வசந்த் இயக்கிய பாலசந்தர், பாரதிராஜா பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. விழாவில், பழம்பெரும் இந்தி இயக்குனர் கோவிந்த் நிகலானி, கவுரவிக்கப்பட்டார். அவருக்கு மணிரத்னம் நினைவுப்பரிசு வழங்கினார். பின்னர் 'எந்திரன்' பட பாடல்களுக்கு சமீரா ரெட்டி நடனம் ஆடினார். இயக்குனர் பார்த்திபன் கவிதை படிக்க, அதை மம்தா மோகன்தாஸ் பாடலாக பாடினார். அதற்கு ராஜேஷ் வைத்யா இசை அமைத்தார். விழாவில், தெலுங்கு இயக்குனர்கள் கே.விஸ்வநாத், கே.ராகவேந்திர ராவ், கோடி ராமகிருஷ்ணா, ஏ.கோதண்டராம ரெட்டி, கன்னட இயக்குனர்கள் துவாரகேஷ், நாகபரணா, கே.எஸ்.ராவ், மலையாள இயக்குனர் ஹரிஹரன், தமிழ் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, ராம நாராயணன் ஆகியோர் அவர்களது சாதனைகளுக்காக கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் மணிரத்னம், அகத்தியன், பாலா ஆகியோருக்கு தங்கத்திலான உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

ரஜினி-கே.பாலசந்தர், விக்ரம்-தரணி, தனுஷ்-வெற்றிமாறன், கார்த்தி-தமன்னா, பாரதிராஜா-இளையராஜா, விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகரன், சரத்குமார்-ராதிகா, ஆர்.கே.செல்வமணி-ரோஜா, கார்த்திக்-ராதா, விவேக்-நதியா, சத்யராஜ்-குஷ்பு, வாலி-எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் ருசிகர கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இயக்குனர் லிங்குசாமி ஒரு காட்சியை விளக்க, அதற்கு இசை அமைப்பாளர் யுவன் இசை அமைக்க, நா.முத்துக்குமார் பாடல் எழுதினார். பாடல் உருவாகும் விதத்தை இப்படி செய்து காட்டினார்கள். வெங்கட் பிரபுவும், விஷ்ணுவர்தனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை விஜயசாரதி, இயக்குனர்கள் பிரியா.வி, ஆர்.கண்ணன், ஜெயம் ராஜா, தருண்கோபி, கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், பொன்வண்ணன் உட்பட பலர் தொகுத்து வழங்கினர்.


Source: Dinakaran
 

சிங்கப்பூரில் வெளியாகும் மன்மதன் அம்பு இசை!

Kamal
கமல்ஹாஸனின் மன்மதன் அம்பு படத்தின் இசை சிங்கப்பூரில் வைத்து வெளியிடப்படுகிறது.
இதற்கான விரிவான ஏற்பாடுகளில் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் இறங்கியுள்ளது.
மன்மதன் அம்பு படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி அமையும்.
சிங்கப்பூரில் உள்ள எக்ஸ்போ அரங்கில் நவம்பர் 20 -ம் தேதி நடக்கும் இந்த விழாவில் கமல்ஹாஸன் உள்ளிட்ட படத்தின் கலைஞர்களும், தமிழ் சினிமா பிரமுகர்களும் பங்கேற்கிறார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அனைத்துப் பாடல்களையும் இசை நிகழ்ச்சியாக மேடையில் பாடவைக்கிறார்.
ஆடியோ வெளியீட்டுக்கு முன் தினம், 500 ரசிகர்களை, ஒரு சொகுசு கப்பலில் அழைத்துச் செல்கிறது மன்மதன் அம்பு டீம்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.
 

உதயநிதியுடன் நடிக்க மறுத்தார் நயனதாரா

Nayantara
உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார் நயனதாரா என்கிறார்கள்.
ஆதவன், விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார் உதயநிதி.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இயக்குநர் ராஜேஷ்தான், உதயநிதியை ஹீரோவாக்குகிறார். அவர் சொன்ன கதையைக் கேட்டதும் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் உதயநிதி.
தற்போது உதயநிதிக்கு ஜோடி தேடிக் கொண்டிருக்கிறார்கள். நயனதாராவைக் கேட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் அவர் சரி என்று சொல்ல மறுத்து விட்டாராம். மேலும், இப்படத்தில் நடிக்கும் ஆர்வத்திலும் அவர் இல்லையாம். அவர் தற்போது வேறு மாதிரியான சூழலில் சிக்கியிருப்பதால் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதே இந்த நிராகரிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.
இருந்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறாராம் ராஜேஷ். அதேசமயம், வேறு நாயகிகள் குறித்தும் பரிசீலனை நடந்து வருகிறதாம்.
இப்படத்திற்கு நண்பேன்டா என்ற பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனத்தையை தலைப்பாக்கலாம் என்று தெரிகிறது.
 

பெட்டியில் முடங்கிய 70படங்கள்!

http://www.impactstudio3d.com/IMAGES/forjavascript/PictureBox/film-roll000.gif 
பெரும் கடன் சுமை, படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன் வராத நிலை, தரமற்ற கதை போன்றவற்றால், ஸூட்டிங் – போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் முடிந்தும் 70 தமிழ்ப் படங்கள் பெட்டியில் முடங்கிக் கிடக்கின்றன.
இவை இந்த ஆண்டு சென்சார் செய்யப்பட்டவை என்பதால், வரும் டிசம்பர் இறுதிக்குள் எப்படியாவது அனைத்துப் படங்களையும் வெளியிட்டுவிடும் முயற்சியில் உள்ளனர்.
“வருடம் முழுவதும் சும்மா இருந்துவிட்டு வருடக் கடைசியில் குய்யோ முறையோ என்று புலம்புவது தமிழ் சினிமாக்காரர்களுக்குப் புதிதல்ல.
இப்போது வெளியாகாமல் உள்ள 70 படங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த 6 மாதங்களுக்கும் முன்பே தயாரானவை. ஆனால் யாரும் வாங்க முன்வராத படங்கள்.
இவற்றை வேறு வழியின்றி இப்போது சொந்தமாகவேனும் வெளியிடத் தயாராகும் தயாரிப்பாளர்கள் இதனை முன்பே செய்திருந்தால், இத்தனை நாட்களுக்கான வட்டியையாவது தவிர்த்திருக்கலாமே” என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 10 வாரங்கள் உள்ளன. அதற்குள் இந்த 70 படங்களும் ரிலீசாகவிருக்கின்றன.
 

கன்னடத்திற்குப் போனார் அபிநயா

Sasikumar and Abhinaya
நாடோடிகள் படம் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களைப் பெற்ற ஆந்திரத்து அபிநயா தற்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாதவராக இருந்தாலும், அந்தக் குறை சற்றும் தெரியாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூடியவர் அபிநயா. நாடோடிகள் படத்தில் அவரது நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது.
நாடோடிகள் மூலம் நடிகையான அபிநயா தற்போது தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் புக் ஆகியுள்ளார். இந்த நிலையில் தற்போது கன்னடத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
நாடோடிகள் படத்தின் கன்னடப் பதிப்பில், தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கிறார் அபி.
கன்னட இளம் சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் இப்படத்தில், சசிகுமாரின் ரோலில் நடிக்கிறார். அவரது தங்கையாக வருகிறார் அபிநயா. தெலுங்கு நாடோடிகளிலும் அபிநயா அதே வேடத்தில்தான் நடித்திருந்தார். அதில் அவரது அண்ணனாக வந்தவர் ரவி தேஜா.
மூன்று மொழிகளிலும் ஒரே கேரக்டரில் நடித்த பெருமை இதன் மூலம் அபிநயாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
அபிநயா நல்ல டான்சரும் கூட. அவருக்கு குரு என்றுயாருமே கிடையாதாம், அவராகவே நடனத்தை கற்றுத் தேர்ந்துள்ளார். இது போக 3 வயது முதலே மாடலிங்கிலும் கலக்கி வருபவர் அபிநயா என்பது குறிப்பிடத்தக்கது.
 

10 பேருக்கு பார்வை போன விவகாரம்:அசினுக்கு நோட்டீஸ்!

Asin
இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ்!
அசின் செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாமில் பங்கேற்றதால் பார்வை பறிபோன இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி அசினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் ஈழத் தமிழர்களுக்கு அரசு சார்பில் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் நடிகை அசின் பங்கேற்றதுடன், முழு செலவையும் ஏற்றார். இதுபோன்ற முகாம்களை இனி தானே முன்னின்று நடத்துவதாகவும் அறிவித்தார்.
இந்த கண் சிகிச்சை முகாமில் 300 ஈழத் தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்யப்பட்டது. லென்ஸ் வாங்கியதிலிருந்து அனைத்து செலவுகளையும் அசின்தான் ஏற்றார். ஆனால் கண் சிகிச்சை பெற்ற 10 தமிழர்கள் பார்வை பாதிக்கப்பட்டது. பலருக்கு பார்வை பறிபோகும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடந்து நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் நோட்டீசு அனுப்பபட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர்அணி பொது செயலாளர் ராம்நகர் குருமூர்த்தி நடிகைஅசினுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், “இலங்கையில் அரசு சார்பில் ஏற்பாடு செய்த கண் சிகிச்சை முகாமில் 300 க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான செலவை நீங்கள்தான் (அசின்) ஏற்றீர்கள். கண் சிகிச்சை செய்த 10 பேருக்கு கண்பார்வை பறிபோய்விட்டது. அவர்களுக்கு கண்ணில் தவறான லென்ஸ் பொருத்தப்பட்டதால் கண் பார்வை போய்விட்டது. மேலும் பலருக்கு கண் பார்வை போகும் நிலை உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டதால் நடிகை அசின் ஈழத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடருவோம்…” என்று கூறியுள்ளார்.
சாமி சிலையை அவமதித்ததாக குஷ்பு மீது வழக்குத் தொடர்ந்தவர்தான் இந்த ராம்நகர் குருமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
 

‘ஒச்சாயி’க்கு வந்த சோதனை!

Ochaayee Movie
முக்குலத்தோர் சமூகத்தினரின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று தமிழக அரசு கேட்டிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சமூகங்களில் ஒன்று முக்குலத்தோர் சமுதாயம். இந்த சமுதாயத்தினரின் குல தெய்வங்களில் ஒன்று ஒச்சாயி அம்மன். இந்தப் பெயரைத் தழுவி முக்குலத்தோர் சமுதாயத்தினர் பெயர்களை வைப்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு பழக்கம்.
ஒச்சு, ஒச்சாயி என்ற பெயர்கள் ஒவ்வொரு முக்குலத்தோர் வீடுகளிலும் சாதாரணமாக காணப்படுவதைக் காணலாம். முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தின் தந்தையின் பெயர் ஒச்சாத் தேவர் என்பதாகும்.
இப்படி முக்குலத்தோர் சமுதாயத்தின் குல தெய்வமான ஒச்சாயி என்ற பெயரை தமிழ்ப் பெயரா என்று கேட்டு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது தமிழக அரசு.
உசிலம்பட்டியைச் சேர்ந்த ஓ. ஆசைத்தம்பி என்பவரது இயக்கத்தில்உருவாகியிருக்கும் படம்தான் ஒச்சாயி. புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு தமிழ்ப் பெயர்களில் அமைந்த திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி சலுகையை தர மறுத்து விட்டதாம் தமிழகஅரசு. காரணம், ஒச்சாயி என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்று கேட்டு மறுத்துள்ளது.
இது தென் மாவட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வ குவார்ட்டர் கட்டிங் என்ற பெயரிலேயே ஒரு தமிழ்ப் படம் உருவாகியுள்ளது. இதற்கு கேளிக்கை வரி விலக்கும் அளித்துள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு தமிழ்ச் சமூகத்தின் குல தெய்வத்தின் பெயரைக் கொண்ட படத்துக்கு தமிழ்ப் பெயரா என்று கேட்டிருப்பது வேதனை தருவதாக முக்குலத்தோர் சமுதாயத்தினர் கூறுகிறார்கள்.
இதுகுறித்து ஒச்சாயி பட இயக்குநர் ஒ.ஆசைத்தம்பி கூறுகையில், உசிலம்பட்டி பகுதியில் கள்ளர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஒச்சாயி பெயரை உடைய பெண் சம்பந்தப்பட்ட சமுதாயக் கதையைத்தான் ஒச்சாயி படமாக எடுத்துள்ளேன்.
எனக்கு மட்டுமல்ல, இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருக்கும் ஒச்சாயி அம்மன் குலதெய்வமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஒச்சாயி தமிழ்ப் பெயரா? எனக் கேட்பது சரியல்ல. ஆகவே படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரியுள்ளோம் என்றார்.
ஒச்சாயி தமிழ்ப் பெயர்தான்-தா.பாண்டியன்
இந்த நிலையில், ஒச்சாயி என்பது தமிழ்ப் பெயர்தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒச்சாயி என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் சூட்டப்பட்ட திரைப்படங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளபடி, ஒச்சாயி படத்த்துக்கும் தரப்படவேண்டும்.
ஆனால், சம்பந்தப்பட்ட இலாகா அதிகரிகள், ஒச்சாயி – தமிழ் தானா? நிரூபணம் தேவை எனக் கேட்டுள்ளனராம். தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர், ஒச்சாயி என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர்.
‘ஒச்சாயி” என்ற பெயர்ச் சொல், தமிழ் அல்ல என்றால், பல்லாயிரம் தமிழ்மொழி பேசும் தாய்மாரை அவமதிக்கும் செயலாகக் கருதப்படும். எனவே, தவறை திருத்திக் கொண்டு, ஒச்சாயிக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என தா.பாண்டியன் கூறியுள்ளார்.