தென்னிந்தியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடியும் சூர்யாவின் சிங்கம் 2!

Singam 2 Starts From South India Ends In South Africa   

சென்னை: சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் கதை தென்னிந்தியாவில் தொடங்கி, தென்னாப்ரிக்காவில் முடிவது போல அமைக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடிக்க, ஹரி இயக்கும் சிங்கம் 2 படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது.

இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட இந்தப் படம் குறித்து, இயக்குநர் ஹரி கூறுகையில், "சிங்கம் 2 வேகமாக இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஒரு படத்தின் இரண்டாம் பாகம், அதன் முதல் பாக கதையை ஒட்டியே உருவாவது இதுதான் முதல் முறை.

முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ் இறந்துவிடுவார். அதனால் இந்த இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. இதில் சந்தானம் இணைந்திருக்கிறார்.

உண்மையில் முதல் பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான அவுட்லைன் என்னிடம் இருந்தது. படத்தின் க்ளைமாக்ஸில் வேட்டை தொடரும் என போட்டதால் பலரும் இரண்டமா பாகம் எப்போது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதன் விளைவு இரண்டாம் பாகத்தை எடுத்தேன்.

முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல் அதே விறுவிறுப்போடு இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளேன். இதன் கதை இந்தியாவில் ஆரம்பித்து தென்னாப்பிரிக்காவில் முடிகிறது. தூத்துக்குடிதான் கதைக்களம் என்றாலும், க்ளைமாக்ஸ் வெளிநாட்டில்தான்," என்றார்.

 

சிவாஜி நடித்த அப்பர் வேடத்தில் நடிப்பதா?- விவேக்குக்கு தொடரும் எதிர்ப்பு!

Sivaji Ganesan Fans Condemned Vivek

சிவாஜி கணேசன் நடித்த அப்பர் வேடத்தில் விவேக் நடிக்கக் கூடாது என்று வேலூர் மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் ஒரு படத்தில் அப்பர் வேடத்தில் சிவாஜி போல நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில் சிவகங்கை மாவட்ட ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது வேலூர் மாவட்ட ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவாஜி மன்றத்தினர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

நடிப்பில் யாராலும் தொடமுடியாத உச்சத்தை தொட்டு ‘திருவருட்செல்வர்' படத்தில் அப்பர் பெருமானாக தத்ரூபமாக வாழ்ந்து காட்டியவர் நடிகர் திலகம்.

அந்த கதாபாத்திரத்தை அவர் தன் வாழ்வில் ஒரு பாக்கியமாக கருதி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நடித்தார். அந்த அப்பர் வேடத்தையும் காமெடி என்ற பெயரில் விவேக் தனது ரிலீசாகப் போகும் ஒரு படத்தில் கிண்டல் செய்திருப்பதாக தெரிகிறது.

அப்படத்தின் சுவரொட்டிகளில் சிவாஜியின் அப்பர் வேடத்தை போலவே விவேக் நடித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ‘பராசக்தி', ‘முதல் மரியாதை' போன்ற படங்களில் நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களை விவேக் காப்பியடித்து கிண்டல் செய்தபோதே நாங்கள் அதை வன்மையாக கண்டித்தோம். ஆனால் விவேக் தனது போக்கை நிறுத்தவில்லை.

மேலும் மேலும் அந்த உலக நடிகரின் ரசிகர்களின் உள்ளங்களை புண்படுத்தி வருகிறார். இனியும் இதுபோன்ற மலிவான விளம்பரங்களில் விவேக் போதை கொள்ளாமல் தனது வேலைகளை இத்தோடு நிறுத்தி கொள்வது நல்லது. இல்லையேல் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்களாகிய நாங்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்று விவேக்கை எரிச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

'சரஸ்வதி சபதம்' தலைப்புக்கு எதிர்ப்பு - சத்யன், ஜெய் வீடுகள் முற்றுகை- சிவாஜி ரசிகர்கள் எச்சரிக்கை

Sivaji Fans Opposes Use Saraswathi Sabatham Title

சிவாஜி கணேசன் நடித்த சரஸ்வதி சபதம் படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்த சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் சத்யன், ஜெய் உள்ளிட்ட அனைவரது வீடுகளையும் முற்றுகையிடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

சிவாஜி கணேசன், பத்மினி, தேவிகா நடித்து 1966-ல் ரிலீசான பக்தி படம் ‘சரஸ்வதி சபதம்'. மிகப்பெரிய வெற்றிப் படம். பட்டி தொட்டியெல்லாம் இந்தப் படத்தின் கதை வசனம் ஒலிபரப்பானது அன்றைக்கு.

‘சரஸ்வதி சபதம்' பெயரில் தற்போது புதுபடம் தயாராகிறது. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். சத்யன், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர். கே.சந்துரு இப்படத்தை இயக்குகிறார்.

‘சரஸ்வதி சபதம்' தலைப்பை ஜெய் படத்துக்கு வைத்து இருப்பதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

சிவாஜி நடித்த காலத்தால் அழிக்க முடியாத காவிய படைப்பு ‘சரஸ்வதி சபதம்'. அந்த தலைப்பில் புதுப்படம் எடுப்பது அதில் நடித்த கலைஞர்களை அவமதிப்பதாகும். ஏற்கனவே விவேக் சிவாஜியின் அப்பர் வேடத்தில் நடித்ததை எதிர்த்தோம். அவர் திருத்தி கொண்டார்.

புது படத்துக்கு சரஸ்வதி சபதம் பெயர் வைக்ககூடாது மீறி வைத்தால் அதில் நடிக்கும் ஜெய், சத்யன் உள்ளிட்டோர் வீடுகளில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று கூறப்பட்டுள்ளது.

சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சிவாஜி நடித்த புராண இதிகாச படங்களின் தலைப்புகளை புதுப்படங்களுக்கு சூட்டக்கூடாது. உத்தமபுத்திரன், கவுரவம், இருவர் உள்ளம் போன்ற தலைப்புகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கவில்லை. ‘திருவிளையாடல்' தலைப்பு வைக்க எதிர்த்தோம். அதை திருவிளையாடல் ஆரம்பம் என மாற்றினர்.

இப்போது ‘சரஸ்வதி சபதம்' தலைப்பு புதுப்படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்களில் இன்றும் சரஸ்வதி சபதம் வசனம் ஒளிபரப்பப்படுகிறது. இதே பெயரில் காதல் காமெடி படம் எடுப்பது இந்து தெய்வங்களையும், சிவாஜியையும் அவமதிக்கும் செயல். எனவே தலைப்பை மாற்றகோரி கோர்ட்டுக்கு செல்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இனி நான் சுதந்திரமானவள்.. என் வாழ்க்கையை நானே முடிவு செய்வேன்! -அஞ்சலி

I M Free Bird Now Says Anjali

இனி நான் சுதந்திரமானவள். என் வாழ்க்கையை நான்தான் முடிவு செய்வேன், என்று நடிகை அஞ்சலி வீடியோ மூலம் பேட்டியளித்துள்ளார்.

சித்தி மற்றும் இயக்குநர் களஞ்சியம் ஆகியோரின் கொடுமையால் வீட்டைவிட்டு வெளியேறி 5 நாட்கள் தலைமறைவாக இருந்த அஞ்சலி, இப்போது வெளியில் வந்து பேச ஆரம்பித்துள்ளார்.

ஹைதராபாதில் போலீஸ் முன் ஆஜரான பின் நிருபர்களிடம் பேசிய அஞ்சலி, இப்போது வீடியோ மூலம் தனது பேட்டியை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அவற்றிலிருந்து மீண்டு இப்போது வெளியே வந்து விட்டேன். என் சொந்த வாழ்க்கை சம்பந்தமான அனைத்து முடிவுகளையும் இனிமேல் நான்தான் எடுப்பேன். என் முழு கவனமும் இனி சினிமாவில்தான் இருக்கும்.

ஏற்கனவே ரவிதேஜாவுடன் ‘பலுபு' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தேன். அந்த படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகள் கொஞ்சம் பாக்கி உள்ளது. அவற்றை முடித்து கொடுப்பேன்.

இந்தியில் தயாரான போல்பச்சன் படம் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. அந்த படத்திலும் நடிக்கிறேன். எனது நடவடிக்கைகளால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டன. இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இக்கட்டான சூழலில் பத்திரிகைகள், டி.வி.க்கள் மற்றும் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

களஞ்சியம் ஜோடியாக ‘ஊர்சுற்றி புராணம்' என்ற படத்தில் அஞ்சலி 10 நாட்கள் நடித்துள்ளார். அதில் இன்னும் நடிக்க வேண்டி உள்ளது. அப்படம் பற்றி தனது பேட்டியில் அவர் எதுவும் கூறவில்லை.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்று ஏற்கனவே அவர் கூறி உள்ளார். எனவே ‘ஊர் சுற்றி புராணம்' படத்தில் அவர் நடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

‘போல்பச்சன்' தெலுங்கு படப்பிடிப்பு மராட்டிய மாநிலம் புனேயில் இன்று நடந்தது. இதில் இன்று பங்கேற்று நடிக்கிறார் அஞ்சலி.

 

பிபி ஸ்ரீனிவாஸ் உடல் தகனம் - திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

Pb Srinivas Body Cremated

தமிழ் சினிமா இசையில் தனக்கென ஒரு இடம் வகித்த பிபி ஸ்ரீனிவாஸ் நேற்று மரணமடைந்தார். அவர் உடல் இன்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி விடை கொடுத்தனர்.

83 வயதான பி.பி.ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், என்.டி.ராமாராவ், ராஜ்குமார் படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் சி.ஐ.டி. நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

பி.பி.ஸ்ரீனிவாஸ் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். முதல்வர் சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேயர் சைதை துரைசாமி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் கணேஷ், தேவா, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, பின்னணி பாடகிகள் பி.சுசிலா, எஸ். ஜானகி, வாணிஜெயராம், மாலதி, எஸ்.பி.சைலஜா உள்பட திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திர சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், "பி.பி.ஸ்ரீனிவாஸ் தேனிசை குரலாக ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்தார். தமிழக அரசு அவருக்கு இயல் இசை நாடக மன்றத்தில் பதவி அளித்து கவுரவித்தது. பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் உடல் இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

ஜெயாடிவி ஜாக்பாட்டில் கும்கி – வழக்கு எண் 18/9 குழு

Tamil New Year Special Jack Pot On Jaya Tv

ஜெயா டிவியில் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி சிறப்பு ஜாக்பாட் ஒளிபரப்பாகிறது. இதில் கும்கி பட நடிகர்களுக்கு வழக்கு எண் 18/9 பட நடிகர்களும் பங்கேற்று சுவாரஸ்யமாக விளையாடுகின்றனர்.

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜாக்பாட் நிகழ்ச்சியை நடிகை சிம்ரன் தொகுத்து வழங்குகிறார். நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒளிபரப்பாகும் சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில் கும்கி திரைப்படக் குழுவினரும், வழக்கு எண் 18/9 திரைப்படக் குழுவினரும் இரு அணிகளாக பங்கு பெற்றனர்.

ஒரு அணியில் கும்கி படத்தின் நாயகன் விக்ரம் பிரபு, நாயகி லட்சுமிமேனன், நடிகர் அஸ்வின் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

மற்றொரு அணியில் வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ, நாயகி மனிஷா யாதவ், தேசிய விருது பெற்ற ஒப்பனைக்கலைஞர் ராஜா, படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோரும் மோதுகின்றனர். இதில் வெற்றி பெரும் அணிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். ஞாயிறு இரவு 8 மணிக்கு இந்த சிறப்பு ஜாக்பாட் நிகழ்ச்சியைக் காணலாம்.

 

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கிறார் சூப்பர் ஸ்டார்!

Rajini Participate Cannes Festival

சென்னை: உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்டு கோச்சடையான் பட டிரைலரை வெளியிடுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச படவிழா நடைபெறுகிறது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களுடன், இந்திய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.

வழக்கமாக பாலிவுட் திரை நட்சத்திரங்கள்தான் இந்த விழாவில் பெருமளவு கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்த ஆண்டு, கேன்ஸ் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக மே மாதம் அவர் பிரான்ஸ் செல்கிறார்.

அவர் இரு வேடங்களில் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் ‘கோச்சடையான்' படத்தின் டிரெய்லர் இதில் வெளியிடப்படுகிறது.

கேன்ஸ் பட விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வதை படத்தின் இணை தயாரிப்பாளரான முரளிமனோகர் உறுதி செய்துள்ளார். ‘கோச்சடையான்' படம் இந்திய சினிமாவில் புதிய தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட படமாக இருக்கும் என்றும், படம் வெளியாகும் தேதி மே மாதம் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ரஜினிகாந்த் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள். இப்போது அவர் அனைத்து வகையிலும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார். எனவே கேன்ஸ் பட விழாவில் கலந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

இந்த விழாவில் நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார். அமிதாப்பச்சன் முதல் முறையாக ‘தி கிரேட் கேட்ஸ்பி' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் கேன்ஸ் படவிழாவில் திரையிடப்படுவதால், சிறப்பு அழைப்பாளராக அவர் கேன்ஸ் செல்கிறார்.

 

ஹைதராபாத் போலீஸ் முன் ஆஜரானார் அஞ்சலி.. மும்பையில் தங்கியிருந்ததாக விளக்கம்!

ஹைதராபாத்: காணாமல் போய்விட்டதாக கடந்த ஒரு வார காலம் பரபரப்பாக பேசப்பட்ட அஞ்சலி, நேற்று இரவு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார்.

தன் சித்தி பாரதி தேவியும் இயக்குநர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்த அஞ்சலி, ஹைதராபாத் ஓட்டலிலிருந்து கடந்த திங்கள் கிழமை மாயமானார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹைதராபாத் போலீசில் புகார் செய்தார்.

அவரது சித்தி பாரதி தேவி சென்னை போலீசில் புகார் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார்.

missing anjali makes appearance before hyderabad police   
இந்நிலையில், 12.04.2013 வெள்ளிக்கிழமை இரவு நடிகை அஞ்சலி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் போலீஸ் முன் ஆஜரானார்.

கடந்த 5 நாட்களாக அஞ்சலி எங்கு தங்கியிருந்தார்? அவருக்கு அடைக்கலம் தந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர்.

ஹைதராபாத் வடக்கு பகுதி துணை கமிஷனர் சுதீர் பாபு கூறுகையில், "மன உளைச்சல், தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக மும்பை சென்றிருந்ததாக அஞ்சலி கூறினார். அவரது வாக்குமூலத்தை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்," என்றார்.

ஹைதராபாத் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு நடிகை அஞ்சலி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read in English: Hyd: Missing actress Anjali returns
 

நான் வெளியேறிய அன்று கூட என் சித்தியும் சித்தப்பாவும் என்னை அடித்து துன்புறுத்தினர்! - அஞ்சலி

ஹைதராபாத்: சித்தியிடமும் களஞ்சியத்திடமும் நான் அனுபவித்த சித்திரவதைகளை விரைவில் வெளியிடுவேன் என்று நிருபர்களிடம் கூறினார் நடிகை அஞ்சலி.

கடந்த ஒரு வாரமாக அஞ்சலி விவகாரம் பரபரப்பாக உள்ளது. சித்தி கொடுமை, இயக்குநர் களஞ்சியத்தின் அச்சுறுத்தல் போன்றவை குறித்து கடந்த வாரம் அம்பலப்படுத்திய நடிகை அஞ்சலி, திடீரென ஹைதராபாதிலிருந்து காணாமல் போனார்.

இதனால் அவர் நடிக்க இருந்த தெலுங்கு பட ஷூட்டிங்கும் தடைபட்டது. காணாமல் போன அஞ்சலியை பல இடங்களில் தேடினர். ஆனால் அஞ்சலியோ தன் சகோதரரிடம் மட்டும் அவ்வப்போது பேசி வந்தார்.

anjali meets the press

இதற்கிடையில் அஞ்சலியின் குற்றச்சாட்டுகளை மறுத்து பாரதி தேவி ஒருபக்கம் பேசி வந்தார். இயக்குநர் களஞ்சியமோ அஞ்சலி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

அஞ்சலியை யாரோ கடத்திவிட்டார்கள், அவரை கொண்டு வந்து ஆஜர்ப்படுத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்தார்.

இந்த வழக்கில் 2 வாரத்துக்குள் அஞ்சலியைக் கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவிட்டதால், தீவிர தேடுதலில் இறங்கினர் போலீசார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஹைதராபாத் வடக்கு துணை கமிஷனர் சுதீர்பாபு முன்னிலையில் ஜூப்லி ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார் அஞ்சலி.

போலீஸ் நிலையத்தில் விசாரணை முடிந்து வெளியில் வந்த அஞ்சலி நிருபர்களைச் சந்தித்தார். அவர கூறுகையில், "மிகுந்த நெருக்கடியான நிலையில் இருந்தேன். இப்போதுதான் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்கிறேன். நிம்மதியாக உள்ளது.

இதுவரை அனுபவித்த அத்தனை சித்திரவதைகளையும் விரைவில் வெளியிடப் போகிறேன்.

அடித்து துன்புறுத்திய சித்தி

என்னை தினமும் அடித்து துன்புறுத்துவார் என் சித்தி பாரதிதேவி. நான் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் இரவுகூட என்னை கடுமையாக அடித்தார் சித்தி.

ஹைதராபாத் ஹோட்டல் அறையில் என்னுடன் தங்கியிருந்த சித்தப்பா சூரி பாபு என்னை கடுமையாகத் தாக்கினார். அடித்து துன்புறுத்தினார். அதனால்தான் அடுத்த நாள் நானாகவே வெளியேறினேன். என்னை யாரும் கடத்தவில்லை. இதன் பின்னணியில் யாரும் இல்லை. என்னால் பொறுக்க முடியாத அளவுக்கு துன்புறுத்திவிட்டனர்.

போலீசிலும் என் வாக்குமூலத்தைப் பதிவு செய்துவிட்டேன். ஒரு சில தினங்களில் மீண்டும் முழு வீச்சில் ஷூட்டிங்கில் பங்கேற்கப் போகிறேன்.

இனி யாரிடமும் என் சார்பாக தயாரிப்பாளர்களோ திரையுலகினரோ பேச வேண்டியதில்லை. என்னிடமோ பேசலாம்," என்றார்.

நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகப் போகிறார் அஞ்சலி.

 

வாசிம் அக்ரமை திருமணம் செய்யவில்லை - சுஷ்மிதா சென் விளக்கம்

Wedding With Wasim Akram Is Absolute Rubbish

மும்பை: பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமை திருமணம் செய்யப் போவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று நடிகை சுஷ்மிதா சென் கூறினார்.

வாசிம் அக்ரமுக்கும், இந்தி நடிகையும், முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்னுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் வாசிம் அக்ரமை சுஷ்மிதா சென் திருமணம் செய்ய முடிவு செய்து இருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி வருகிறது.

ஆரம்பத்தில் அமைதி காத்த சுஷ்மிதா சென், இப்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்திருப்பதாவது:

வாசிம் அக்ரமை நான் திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி. முட்டாள்தனமான ஒன்று. வாசிம் அக்ரம் எப்போதுமே எனக்கு நல்ல நண்பர். இது மாதிரியான வதந்திகள் எங்களுக்கு அவமானமாகவும் சங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன," என்றார்.

வாசிம் அக்ரமும் இந்த தகவலை மறுத்துள்ளார்.

 

கோச்சடையான் டிரைலர் எப்போது? - சௌந்தர்யா விளக்கம்

Soundarya S Explanation On Kochadaiyaan Trailer

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் பட ட்ரைலரை நாளை வெளியிடும் திட்டமில்லை என்றும், ஆனால் இந்த வாரத்துக்குள் ரஜினியின் புதிய ஸ்டில்கள் வெளியாகும் என்றும் சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகக் கூடும் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் இதனை ட்விட்டரில் மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் சௌந்தர்யா.

இதுகுறித்து ட்விட்டரில் விளக்கமளித்துள்ள இயக்குனர் சௌந்தர்யா, "கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் அதன் ட்ரெய்லர் காட்சிகளை வெளியிட இருக்கிறோம்.

ஆனால், 14 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று வந்த செய்திகள் வெறும் வதந்திதான். அதே நேரம் இந்த வாரம் தலைவரின் அசத்தலான சில ஸ்டில்களை மட்டும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறியுள்ளார்.

அதே நேரம், கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தப் படத்தின் ட்ரைலரை ரஜினியே வெளியிடுவார் என்பதை அவர் மறுக்கவில்லை.

 

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மரணம்... திரை உலகினர் கண்ணீர் அஞ்சலி

Playback Singer P B Srinivas Passes Away

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணமடைந்தார் அவருக்கு வயது 83.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி பிறந்தவர் பி.பி.ஸ்ரீனிவாஸ். ஜெமினியின் ஹிந்திப் படமான மிஸ்டர் சம்பத் என்ற படத்தில் 1952ல் இந்திப்படத்தில் அறிமுகமானார்.

அவரது மென்மையான குரல் அவருக்கு பெருவாரியான ரசிகர்களை பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் உள்பட 12 மொழிகளில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடல் பாடியுள்ளார்.

தமிழில் ஜெமினிகணேசனுக்கும், கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அதிக அளவில் பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ்,ரோஜா மலரே ராஜகுமாரி,காலங்களில் அவள் வசந்தம் போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடியுள்ளார். வயதானதால் பின்னணி பாடாமல் ஒதுங்கியிருந்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் வசித்து வந்த பி.பி. ஸ்ரீனிவாஸ், ஞாயிறு மதியம் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பி.பி.ஸ்ரீனிவாஸ் உடலும் திரைஉலக பின்னணி பாடகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா இரங்கல்

சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலகப் பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீனிவாசின் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று இறுதிச் சடங்கு நடைபெறும் என பி.பி.ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

அஞ்சலி விவகாரம்- களஞ்சியத்துக்கு எதிராக திமுக, காங். சதியாம்!

Anjali Issue Kalangiam Alleges Dmk

சென்னை: நடிகை அஞ்சலி விவகாரத்தில், தனக்கு எதிரான திமுகவும் காங்கிரஸ் கட்சியும் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் மு களஞ்சியம்.

தனது சித்தியுடன் சேர்ந்து தன்னை துன்புறுத்தி வருகிறார் களஞ்சியம் என்றும், தன் சொத்துகளை அபகரித்துவிட்டார் என்றும் நடிகை அஞ்சலி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

பின்னர் சில தினங்கள் காணாமல் போய், மீண்டும் போலீஸ் முன் ஆஜரான அவர், தன் குறறச்சாட்டில் உறுதியாக இருந்தார்.

இதனால் கடுப்பான களஞ்சியம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் செய்துள்ளார்.

இந்தநிலையில் நாகர்கோவிலில் இன்று அவரது தமிழர் நலம் இயக்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த களஞ்சியம் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகை அஞ்சலி விவகாரம் அவரது குடும்பப் பிரச்சினை. அவர் வீட்டை விட்டு ஓடிப் போய் தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் புகார் சொல்வது அர்த்தமற்றது.

நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.

அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இதுதொடர்பாக கோர்ட்டில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இதனால் அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி எனது அமைப்பினர் மீதும் வீசி உள்ளார். தற்போது ‘ஊர் சுற்றும் புராணம்' படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி வேலை பார்த்தார்.

இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24-ந் தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்காவிட்டால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன்.

ஆனால் நடிக்க வந்தால் இணைந்து நடிப்பேன்," என்றார்.

 

பிபி ஸ்ரீனிவாஸ்... காதலை வளர்த்த குரல்.. கண்ணீர் துடைத்த குரல் - வைரமுத்து

Vairamuthu Condoles Pbs Demise

சென்னை: பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, ‘‘அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல், கண்ணீரை துடைத்த குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது'' என்று கூறி உள்ளார்.

பழம் பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாசின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள

இரங்கல் செய்தி:

அரை நூற்றாண்டாக ரசிகர்களின் காதலை வளர்த்த குரல்; கண்ணீரை துடைத்த குரல் இன்று முதல் பாடுவதை நிறுத்திக்கொண்டது. பி.பி.ஸ்ரீனிவாசின் குரல் வித்தியாசமான குரல். மழையில் நனைந்து வரும் காற்றாக சில்லிட்டு பரவும் தேன் குரல். மனதின் சந்து பொந்துகளை சலவை செய்யும் குரல். அதில் காதலின் லயமும் இருக்கும்; சோகத்தின் சுகமும் இருக்கும்.

‘காலங்களில் அவள் வசந்தம்', ‘ரோஜா மலரே ராஜகுமாரி', ‘மவுனமே பார்வையால் ஒரு பாட்டு பாடவேண்டும்' என்று அவர் காதலை பாடும் போது அதில் கண்ணியம் இருக்கும். ‘மயக்கமா கலக்கமா', ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்', ‘கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள்' என்று அவர் சோகத்தை பாடும் போது கண்ணுக்கு தெரியாத கண்ணீர் இருக்கும்.

தாய் மொழி வேறாக இருந்தாலும் தமிழை தமிழாக உச்சரித்தவர் அவர். உடல் கடந்த வாழ்க்கை வாழ்கிறவன் மரணத்தை வெல்கிறான். அவர் உடல் மறைந்தாலும் உடலைப்போல் மறையாத பாடல்கள் காலமெல்லாம் காற்றோடு வாழ்ந்து கொண்டு இருக்கும்.

நெஞ்சு வலிக்கிறது என்றாராம், உடனே உயிர் பிரிந்து விட்டதாம். அவர் பாடல்களைப் போலவே அவரது மரணமும் சுகமானது. காலங்களில் அவர் வசந்தம். கலைகளிலே அவர் சங்கீதம். பறவைகளில் அவர் ஆண் குயில். பாடல்களில் அவர் பி.பி.எஸ்.

‘ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் திரையுலகில் அவர் பாடிய கடைசி பாடலை எழுதியவன் என்கிற முறையில் நான் மேலும் கண் கலங்குகிறேன். அவர் ரசிகர்களின் கண்ணீர் வரிசையில் முதலும் கடைசியுமாய் நான் நிற்கிறேன்.

இவ்வாறு அந்த செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

 

மரியானில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கம்?

Dhanush Remove Smoking Scenes From Mariyaan

சென்னை: கடும் எதிர்ப்பு காரணமாக மரியான் படத்தில் தனுஷ் பீடி பிடிக்கும் காட்சியை நீக்க முடிவு செய்துள்ளனர்.

தனுஷ் நடிக்கும் மரியான் படத்தில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மரியான் படத்தின் விளம்பரத்தில் தனுஷ் புகை பிடிக்கும் காட்சிகளை முதன்மைப்படுத்தி வெளியிட்டு உள்ளனர். புகை பிடிக்கும் காட்சிகள் விளம்பரங்களில் இடம் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று ரஜினி காந்த் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அவரது மருமகன் தனுஷ் புகை பிடிக்கும் காட்சியில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 'மரியான்' படத்தில் புகை பிடிக்கும் காட்சி இடம் பெறாமல் தனுஷ் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து புகை பிடிக்கும் காட்சிகளை நீக்க தனுஷும் இயக்குநர் பரத் பாலாவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.