சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் உள்பட 7 பேரை விடுவிக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரையுலகம் ஆதரவும் நன்றியும் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் விடுதலை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "உலக நாடுகள் அனைத்தும் தூக்குத் தண்டனையை எதிர்க்கும் சூழ்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சதாசிவம் மிக சரியான தீர்ப்பை சொல்லி இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது மாநில அரசின் முடிவு என்று அவர் தீர்ப்பு கூறியதும் முதல்வர் ஜெயலலிதா தாய்மை உணர்வுடன் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேர் உள்பட சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதற்காக உலக தமிழர்கள் அத்தனைபேரும், கண்ணீரால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மறப்பதும், மன்னிப்பதும் மனித மாண்பு. முதல் முறையாக தமிழன் தலை நிமிர்ந்து நிற்பதற்கான ஒரு முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார். இதற்காக ஒட்டு மொத்த தமிழர்களும் அவருக்கு உறுதுணையாக நிற்பார்கள்," என்றார்.
சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் பேசும்போது, "தலைமை பதவியில் இருப்பவர்கள் வீரமும், விவேகமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வீரமும் விவேகமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகம் முழு மூச்சாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும்," என்றார்.
கேயார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் பேசுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மனித நேயத்துடன் முடிவெடுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதில் அரசியல் கிடையாது. எனவே தமிழ் திரையுலகை சார்ந்த நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்," என்றார்.
இந்த கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வீ.சேகர், தென்னிந்திய திரைப்பட சம்மேளன தலைவர் அமீர், செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் அங்கமுத்து சண்முகம், கவிஞர் தாமரை, பட அதிபர் சித்ரா லட்சுமணன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் பேசினார்கள். இயக்குநர் கவுதமன் நன்றி கூறினார்.