சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்- இஸ்லாமிய மத குருக்கள் கூட்டறிக்கை!

மும்பை: நரேந்திர மோடிக்கு ஆதரவாகக் களமிறங்கியிருக்கும் நடிகர் சல்மான்கானின் படங்களைப் புறக்கணிக்குமாறு இஸ்லாமிய மதகுருக்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆதரவாளராக மாறியுள்ளார் நடிகர் சல்மான்கான். குஜராத் கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

சல்மான்கானின் இந்த கருத்து முஸ்லிம்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. சல்மான்கானுக்கு எதிராகப் போராட்டங்களும் நடந்து வருகின்றன. தனது செயலுக்கு சல்மான் அளித்த விளக்கத்தையும் யாரும் ஏற்கவில்லை.

சல்மான்கான் படங்களைப் புறக்கணியுங்கள்- இஸ்லாமிய மத குருக்கள் கூட்டறிக்கை!

இந்நிலையில் இஸ்லாமிய மதக் குருமார்கள் நேற்று சல்மான்கானுக்கு எதிரான ஒரு கூட்டு அறிவிப்பை வெளயிட்டார்கள்.

அதில், "குஜராத்தில் நடந்த கலவரத்துக்காக மோடி மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று சல்மான்கான் கூறி இருப்பது உள்நோக்கம் கொண்டது. இஸ்லாமியர்களின் உணர்வை அவர் காயப்படுத்தியுள்ளார். எனவே சல்மான்கான் நடித்த படங்களை பார்க்காமல் முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை இந்த புறக்கணிப்பை நீட்டிக்க வேண்டும்.

நரேந்திர மோடி தன் இமேஜை உயர்த்திக் கொள்வதற்காக எதையும் செய்வார். இது சல்மான்கானுக்கு தெரியுமா? குஜராத் கலவரத்தின் போது பெண்களும், குழந்தைகளும் அடைந்த வேதனையை அவர் அறிவாரா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஏதாவது உதவிக்கரம் நீட்டினாரா?," என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

 

அவருக்கு 30; எனக்கு 25.. வேறென்ன, கோடிகள்தான்!

இந்த ஒரு ஜான் வயித்துக்கு மிஞ்சிப் போனா நாலு இட்லி தேவை. அவ்ளோதாங்க வாழ்க்கை. அதுக்கு மேல நான் ஆசைப்படறதில்லே, என்று பொது மேடையில் பேசி வியக்க வைத்த தாஸ் இயக்குநர் இப்போது கேட்கும் சம்பளத்தைக் கேட்டு வாயடைத்து நிற்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஜில்லா நடிகரை வைத்து அவர் அடுத்து இயக்கும் புதுப் படத்துக்கு கேட்ட சம்பளத்தில் நான்கு மீடியம் பட்ஜெட் படங்களே எடுத்துவிடலாம்.

ஹீரோவுக்கு எப்படியும் ரூ 30 கோடி வரை கொடுக்கப் போறீங்க. ஆனா படத்துக்கு மெயின் இயக்குநரான நான்தான். அதனால எனக்கு ஒரு 25 கோடி கொடுத்துடுங்க. பிரமாதமா எடுத்துடலாம் படத்தை என்றாராம் தயாரிப்பாளர்களிடம்.

'ஏங்க, நாங்களே நொந்து நஞ்சி போய்... இப்போதான் கொஞ்சம் தலை தூக்கி இருக்கிறோம்.. பாத்து கேளுங்க... ஒரு 18 கோடி வச்சிக்குங்க என்று பேரம் பேச, மூணு வருஷத்துக்கு முந்தி நான் வாங்கின சம்பளமாச்சே அது என முகவாயைத் தடவுகிறாராம் இயக்குநர்!

 

குஷ்புவின் புது ஆடி கார் பின்பக்கத்தை நொறுக்கிய மாநகரப் பேருந்து!

சென்னை: நடிகை குஷ்புவின் புதிய ஆடி க்யூ5 காரின் பின்பக்கம் மீது மோதியது மாநகரப் பேருந்து. இதில் அந்தக் காரின் பின்பக்கம் அப்பளமாக நொறுங்கியது.

குஷ்புவுக்கு அவர் கணவர் இயக்குநர் சுந்தர் சி பரிசாகக் கொடுத்த கார் இந்த ஆடி க்யூ 5.

இந்தக் காரில் நேற்று பயணம் செய்த குஷ்பு, ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்தி, பச்சை விளக்குக்காகக் காத்திருந்தார்.

குஷ்புவின் புது ஆடி கார் பின்பக்கத்தை நொறுக்கிய மாநகரப் பேருந்து!

அப்போது சற்று வேகமாக வந்த மாநகரப் போருந்து டமால் என குஷ்பு காரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் அந்தக் காரின் பின்பக்கம் நொறுங்கியது. பின் பக்க விளக்குகள் அனைத்தும் நொறுங்கின. காரின் பம்பர் போன்றவையும் நசுங்கின.

இந்த விபத்து குறித்து தனது ட்விட்டரில் குஷ்பு கூறுகையில், "வாவ்.. என்னா ஒரு இடி.. சிக்னலில் ரெட் லைட்டுக்காகக் காத்திருந்த போது மாநகரப் பேருந்து என் கார் மீது ஒரு சிக்ஸ் அடித்தது போல மோதி, பின்பக்க விளக்குகள், பம்பரைப் பதம் பார்த்துவிட்டது. அடுத்து என்ன... அந்த ட்ரைவர் எனக்கு அட்வைசும் எச்சரிக்கையும் கொடுத்துவிட்டுப் போகப் போகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "காரை இடித்ததும் முதல் வேலையாக பஸ் நம்பர் பிளேட் மற்றும் ரூட் பிளேட்டை நீக்கிவிட்டார்கள். ட்ரைவரிடம் லைசென்ஸ் கூட இல்லை. யாரும் இதெல்லாம் கேட்பதில்லை என்கிறார்கள். ஏன்? நாம் இப்படி வந்தால் அனுமதிப்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"எனக்கு ஒன்றுமில்லை, நலமாக உள்ளேன். ஆனால் இந்தக் கார் என் கணவர் சுந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தது. அதை இப்படி நொறுக்கிவிட்டதை நினைத்து என் இதயம் ரத்தம் வடிக்கிறது. விபத்து குறித்து அறிந்ததும் என்னை நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி", என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அந்த புதுமுக ஹீரோயின் இருக்குல..: போட்டுக் கொடுக்கும் நடிகை

சென்னை: மீன் பெயரில் வரும் படத்தில் அறிமுகமாகும் நடிகை புதுசு எல்லாம் கிடையாது அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் குட்டி குட்டி வேடங்களில் நடித்தவர் என்று போட்டுக் கொடுத்து வருகிறாராம் ஊதா கலரு ரிப்பன்.

இளைய திலகத்தின் மகனை வைத்து யானை பெயரில் படம் எடுத்த அந்த இயக்குனர் தற்போது மீனை குறிக்கும் 3 எழுத்தில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சந்தோஷம் என்பதை குறிக்கும் பெயர் கொண்ட 4 எழுத்து நடிகையை அவர் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார். இந்த நடிகையை நானே தேடிப் பிடித்து நடிக்க அழைத்து வந்தேன். அவர் சினிமாவுக்கு புதுசு என்றார் இயக்குனர்.

இந்நிலையில் ஊதா கலரு ரிப்பனோ பார்ப்பவர்களிடம் எல்லாம் அந்த நடிகையைப் பற்றி வேறு விதமாக கூறி வருகிறார். அந்த நடிகை ஒன்றும் இயக்குனர் கூறுவது போன்று புதுசு எல்லாம் கிடையாது. அவர் ஏற்கனவே தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் தான் என்று கூறுகிறார் ஊதா கலரு ரிப்பன்.

தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையேயான போட்டியும், பொறாமையும் தான் ஊதா கலரு ரிப்பன் இப்படி கூறி வருவதற்கு காரணமாம். எங்கே தமிழில் தன்னை விட அவர் பெரிய நடிகையாகிவிடுவாரோ என்ற பயமும் ஒரு காரணமாம்.

 

விஷால், நாசர், சந்தானத்துக்கு அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதங்கள்

சென்னை: நடிகர்கள் விஷால், நாசர், சந்தானம் மற்றும் சிவகுமாருக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நடிகர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த கொலை மிரட்டல் கடிதங்கள் குறித்து நாசர் கூறுகையில், "எனக்கு மிரட்டல் கடிதம் வந்து இருக்கிறது. அதை அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. பெயர் முகவரி இல்லாமல் மொட்டை கடிதமாக அதை அனுப்பி வைத்துள்ளனர். கையால் எழுதாமல் டைப் செய்து அனுப்பியுள்ளனர். மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார்கள். தைரியம் இருந்து இருந்தால் நேரடியாக என்னிடம் மோதி இருக்கலாம்.

விஷால், நாசர், சந்தானத்துக்கு அசிங்கமாகத் திட்டி மிரட்டல் கடிதங்கள்

இன்னும் சிலருக்கும் இது போல் மிரட்டல் விடுத்து மொட்டை கடிதங்கள் வந்திருப்பதாக அறிந்தேன். இதனை நான் சும்மா விடப்போவது இல்லை. ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் போலீசில் புகார் அளிப்பது குறித்து முடிவு செய்வேன்," என்றார்.

சிவக்குமார், விஷால், சந்தானம் போன்றோருக்கும் இதுபோல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய சம்பந்தப்பட்ட நடிகர்கள் முடிவெடுத்துள்ளனர்.

 

பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி! - சந்தோஷ் சிவன்

பத்மஸ்ரீ பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி! - சந்தோஷ் சிவன்

சென்னை: எனக்கு பத்மஸ்ரீ விருதினைப் பெற்றுத் தந்த தமிழ் சினிமாவுக்கு நன்றி என்று பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வென்றவர்களில் பலர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், குறிப்பாக தமிழ்த் திரையுலகைச் சார்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல், வைரமுத்து, விநாயக்ராம் போன்றோருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேட்டியளித்துள்ள சந்தோஷ் சிவன், "பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு எனது நன்றி. என்னை இந்த விருதிற்காக பரிந்துரை செய்த பூனேவிலிருக்கும் திரைப்படக் கல்லூரிக்கு என் நன்றிகள்," என்று கூறியுள்ளார்.

 

மார்ச் 2 முதல் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே 2!

மார்ச் 2 முதல் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே 2!

சத்யமேவ ஜெயதே.. ஏராளமான பாராட்டுகளையும் அதற்கு நிகரான விமர்சனங்களையும் சந்தித்த தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி இது. 2012-ல் ஆமீர் கான் இதனை நடத்தினார்.

ஒரு ஆண்டு இடைவெளி விட்டு மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொடர்கிறார் ஆமீர். இந்த முறை முற்றிலும் புதிய வடிவில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது, ஸ்டார் ப்ளஸ்ஸில்.

முந்தைய நிகழ்ச்சியில் பெண் சிசுக் கொலை, சாதிக் கொடுமைகள், குழந்தை வதை, குடும்ப வன்முறை போன்ற நிகழ்ச்சிகளைப் பற்றி அதிரவைக்கும் பல உண்மைகளை மக்களிடம் கொண்டு போனார் ஆமீர் கான்.

இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்புக்கு நிகராக விமர்சனங்களும் கிளம்பின. குறிப்பாக சாதிய கொடுமைகள் குறித்த நிகழ்ச்சியில், அந்த கொடுமைகள் ஒழிக்கப்பட்டதில் அண்ணல் அம்பேத்கர் பங்கு குறித்து எதையுமே ஆமீர் சொல்லவில்லை என்று கூறப்பட்டது.

மேலும் தலித் மக்களின் மீதான் கொடுமைகளை, ஒரு பிராமணரின் பார்வையிலிருந்து அவர் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இப்போது இரண்டாவது சீஸனை வரும் மார்ச் 2ம் தேதி ஆரம்பிக்கிறார் ஆமீர் கான்.

ஒவ்வொரு சமூகப் பிரச்சினை தொடர்பான விவாதத்தையும் நான்கு எபிசோடுகளாக பிரித்து ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பவிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோ யுட்யூபில் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

டி ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்!

சென்னை: இயக்குநரும் திமுக பிரமுகருமான டி ராஜேந்தரின் மகள் இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் நடக்கிறது.

மணமகன் பெயர் அபிலாஷ் ‘பி.டெக்.' பட்டதாரி. ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர்.

டி.ராஜேந்தருக்கு, சிலம்பரசன், குறளரசன் என இரண்டு மகன்களும், இலக்கியா என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில், இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர்.

டி ராஜேந்தர் மகள் இலக்கியா திருமணம்- ஹைதராபாத் மாப்பிள்ளையை மணக்கிறார்!

இலக்கியா-அபிலாஷ் திருமணம் பிப்ரவரி 10-ந்தேதி காலை 9 மணிக்கு, சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் ஆகும்.

மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அன்று மாலை 6.30 மணிக்கு அதே ஓட்டலில் நடக்கிறது.

திருமணத்துக்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர், அவருடைய மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.