500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் தேதி முதல் முன்பதிவு ஆரம்பம்!

Billa 2 On July 13    | அஜீத்  

அஜீத் நடித்துள்ள பில்லா 2 படம் வரும் ஜூலை 13-ம் தேதி வெளியாவதாக படத்தின் தயாரிப்பாளர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட அரங்குகளில் படம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மே மாதத்திலிருந்தே இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. சில தினங்களுக்கு முன் படம் சென்சார் செய்யப்பட்டபோது, ஏ சான்று கொடுத்துவிட்டனர். ஏராளமான காட்சிகளை வெட்டியும் விட்டனர்.

இதனால் பட வெளியீடு திட்டமிட்டபடி ஜூன் 21-ம் தேதி நடக்கவில்லை. மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிப்போய்விட்டது.

இந்த நிலையில், படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"ஆவலுடன் எதிர்ப்பார்த்த தல ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க வருகிறது பில்லா 2. அனைத்து வேலைகளும் முடிந்து பக்கா ஆக்ஷன் த்ரில்லராக வரும் ஜூலை 13-ம் தேதி பில்லா 2ஐ வெளியிடுகிறோம். தமிழகம் முழுவதும் 500க்கும் அதிகமான அரங்குகளில் பில்லா 2 திரையிடப்படும். உலகம் முழுவதும் வெளியாகவுள்ள திரையரங்குகள் விவரம் விரைவில் வெளியிடப்படும்," என்று கூறியுள்ளார்.

 

போதைக்கு பை... கோயில் கோயிலாக சுற்றும் மனீஷா கொய்ராலா!

Manisha Koirala Turns Spiritual   

மும்பையின் ஐந்து நட்சத்திர பார்களில் அடிக்கடி பார்க்க முடிந்த நடிகை மனீஷா கொய்ராலா... இப்போது சதா சர்வகாலமும் சுற்றிக் கொண்டிருப்பது மும்பை, நேபாளத்தில் உள்ள கோயில்களைத்தான்!

உல்லாச வாழ்க்கை வெறுத்துப் போய், ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பிவிட்டாராம்.

தமிழில் முதல்வன், இந்தியன், பாபா படங்களில் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா. இந்தியிலும் முன்னணி நடிகை.

இவருடன் இணைத்துப் பேசப்படாத முன்னணி நடிகர்கள் குறைவு. நடிகர்களைத் தாண்டி வெளிநாட்டு தூதர்களுடனும் நெருக்கமாக இருந்தார்.

கடந்த 2010-ல் நேபாளத்தை சேர்ந்த சாம்ராத் தாஹப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். சந்தோஷமாக இருந்த அவரது குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச துவங்கி உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்போது பிரிந்து வாழ்கிறார்கள்.

கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்ட மனீஷா, விவாகரத்துக்கு மனுவும் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மணவாழ்க்கையில் விடுதலை அடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட, மும்பையில் குடியேறி இரவு விருந்துகளில் பங்கேற்று வந்தார். அவர் போதையில் தள்ளாடியபடி பார்களிலிருந்து வெளியேறும் காட்சிகள் நாளிதழ்களில் அடிக்கடி இடம்பெற ஆரம்பித்தன.

முன்னணி நடிகர், நடிகைகள் மனிஷா நிலை கண்டு பரிதாபப்பட்டார்கள். பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

இதைத் தொடர்ந்து மனிஷாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. போதையை மறக்க ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார். தினமும் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுகிறார்.

தன் சொந்த நாடான நேபாளத்தில் உள்ள இந்துக் கோயில்களுக்கும் சென்றுவர ஆரம்பித்துள்ளார். சென்னையில் உள்ள ஒன்னஸ் தியான மையத்துக்கும் அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார்.

 

விஜய் டிவி நடத்திய அசத்தலான திருமண வரவேற்பு

Saravanan Meenakshi Wedding Reception

தொலைக்காட்சி தொடரில் வரும் திருமணத்திற்காக நிஜ திருமண வரவேற்பு போல பிரமாண்டமான நிகழ்ச்சி ஒன்றினை மக்கள் முன்னிலையில் நடத்தி அசத்தியுள்ளனர் விஜய் டிவி நிறுவனத்தினர்.

அந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8.30 மணிக்கு சரவணன் - மீனாட்சி என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகன், நாயகி இடையே திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணம் பற்றி எதிர்பார்ப்பு இந்த தொடரை பார்ப்பவர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் மக்கள் முன்னிலையில் நிஜ திருமண வரவேற்பு ஒன்றினை நடத்தி அசத்தியுள்ளனர் விஜய் டிவி. இந்த நிகழ்ச்சி ஞாயிறுக்கிழமை ஒளிபரப்பானது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நகைச்சுவை பேச்சாளர் ரோபோ சங்கர் தொகுத்து வழங்கினார். கதையின் நாயகர்கள் சரவணன் - மீனாட்சி பிரம்மாண்டமான மேடையில் நிற்க அவர்களுக்கு போட்டிகளும் நடைபெற்றன. இருவரும் தங்களின் திருமணநாளன்று போடுவதற்கான உடைகளையும், நகைகளையும் ஒரே கருத்துடன் தேர்ந்தெடுத்து ரசிகர்களின் பாராட்டினை பெற்றனர்.

இந்த திருமண வரவேற்பில் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமிழக தொலைக்காட்சி வரலாற்றிலேயே நெடுந்தொடர் ஒன்றில் நடைபெற உள்ள திருமணத்திற்காக ரிசப்ஷன் நடத்தப்பட்டது இதுவாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மடோனாவின் 'டி.என்.ஏ'வை இனி யாரும் திருட முடியாது...!!

Madonna Scared Fans Stealing Her Dn

'பாப் தேவதை' மடோனா ஒரு நூதனமான உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம் தனது உதவியாளர்களுக்கு. அதாவது அவர் எந்த ஷோவில் கலந்து கொண்டாலும், ஷோ முடிந்ததும், அவரது உடை மாற்றும் அறையை பக்காவாக சுத்தப்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. ஏனாம்... அவர் மீது வெறித்தனமாக உள்ள ரசிகர்கள் மடோனாவின் டிஎன்ஏவைத் திருடும் வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்படுகிறாராம் மடோனா. அதனால்தான் இந்த 'சுத்தப்படுத்தும்' உத்தரவாம்.

இதனால் இப்போதெல்லாம் மடோனாவின் டிரஸ்ஸிங் அறையை அவர் போன பிறகு சுத்தமாக 'ஸ்டெரிலைஸ்' செய்து விடுகிறார்களாம். இந்த சுத்தப்படுத்தும் பணிக்காக கூடவே ஒரு டீமையும் கூட்டிக் கொண்டு திரிகிறார் மடோனா. மடோனாவின் டிஎன்ஏ எந்த ரூபத்திலும் சிக்கி விடாத வகையில் இந்த குழுவினர் மிக மிக கவனமாக ஸ்டெரிலைஸ் செய்கிறார்கள். அவரது தலைமுடி, நகம், எச்சில் உள்பட எதுவும் யார் கையிலும் சிக்கி விடாத வகையில் இந்த வேலை நடக்கிறதாம்.

மடோனாவுக்கு இப்போது 53 வயதாகிறது. இருந்தாலும் அதில் பாதி வயதுடையவர் போல இளமையுடன், சிக்கென காணப்படும் மடோனாவுக்கு உலகம் பூராவும் ஏகப்பட்ட ரசிகர்கள். இதனால் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டியுள்ளது மடோனாவால்.

மடோனா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின்போது, மேடையின் பின்பக்க அறைக்குள் அவர் மற்றும் அவருடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வேறு யாரும் அனுமதிக்கப்படக் கூடாது என்று மடோனா உத்தரவு போட்டுள்ளார்.

இது போதாதென்று, தனது டிரஸ்ஸிங் ரூம் மற்றும் தான் தங்கப் போகும் அறை உள்ளிட்டவற்றில் யாராவது கேமராவை புதைத்து மறைத்து வைத்துள்ளனரா என்பதையும் தனது குழுவினர் மூலம் தீவிரமாக பரிசோதித்து விட்டு அதன் பின்னரே அறைக்குள் என்ட்ரி கொடுக்கிறார் மடோனா.

தற்போது உலக இசைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மடோனா. தற்போது போர்ச்சுகலில் முகாமிட்டுள்ளார். ஏற்கனவே இஸ்ரேல், துருக்கி, இத்தாலி, ஸ்பெயினை கலக்கி விட்டு வந்தார்.

இஸ்ரேலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது தனது மார்புக் காம்பைக் காட்டி ரசிகர்களை அதிர வைத்தார். அதேபோல இத்தாலியில் கலந்து கொண்டபோது தனது பின்பக்கத்தைக் காட்டி மிரள வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

 

மீண்டும் சுமா ரங்கநாதன்!

Suman Ranganathan S Comeback   

சுமா ரங்கநாத்தை நினைவிருக்கிறதா... தொன்னூறுகளின் ஆரம்பத்தில் பெரிய அளவில் வருவார் என்று பேசப்பட்ட நடிகை. முதல் படம் புதுப்பாட்டு (எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே... பாட்டு ஞாபகத்துக்கு வருதா...) அதன் பிறகு விஜயகாந்த் ஜோடியாக மாநகரக் காவல் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தவர், இந்தியில் பிஸியானார். ஃபாரெப், ஆ அப் லோட் சலேன் என வெற்றிப் படங்களில் நடித்தவர், மலையாளப் படங்களிலும் நடித்தார்.

2006-ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அது சீக்கிரமே விவாகரத்தில் முடிய, மீண்டும் கன்னடப் படங்களில் பிஸியாகிவிட்டார்.

அவரை தமிழுக்கு மீண்டும் அழைத்து வருகிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன். அஜீத் நடிக்கும் புதிய படத்தில் இவருக்கு முக்கிய வேடமாம்.

தனது தமிழ் மறுபிரவேசம் பற்றி சுமா (சுமன் ரங்கநாதன்) கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது தமிழ் சினிமா பக்கம் வந்து. இத்தனைக்கும் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகைதான் நான். எனக்கான டப்பிங்கை கூட நான்தான் பேசுகிறேன்.

பாலித் தீவில் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் படத்தில் ஒரு பத்திரிகையாளராக நடிக்கிறேன். பெங்களூரில் கடந்த சனிக்கிழமை முதல் காட்சி எடுத்தார்கள். ரொம்ப வித்தியாசமாக உணர்ந்தேன்," என்றார்.

 

நான் பொறுப்பான அம்மா ... விஜி சந்திர சேகர்

Azhagi Serial Amma Viji Chandrasekar

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான ‘அழகி' தொடரில் தன்னம்பிக்கை சுந்தரி. வீட்டு வேலை, ஹாஸ்பிடல், பெட்ரோல் பங்க் என பல வேலைகளைப் பார்த்து கஷ்டப்படும் பெண்ணாக நடித்து நடுத்தர குடும்பத்துப் பெண்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் சம்பாதித்து வைத்துள்ளார் விஜி சந்திரசேகர். சினிமாவில் நடித்த விஜி நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியலில் எண்ட்ரி ஆகியுள்ளார்.

முள்ளும் மலரும் தொடரில் துறு துறு என்று நடித்த விஜி சந்திரசேகர் சில வருடங்கள் காணமல் போய் கிழக்குச் சீமையிலே தொடரில் வடிவேலுக்கு ஜோடியாக வந்தார். அப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் என இருந்தாலும் கொஞ்சகாலம் மீடியாக்களின் கண்களில் சிக்கவில்லை. இப்பொழுது திடீர் சீரியல் பிரவேசம். எதனால் இந்த இடைவெளி என்று கேட்டோம்.

ரெண்டு குழந்தைகளை வளர்க்கவே நேரம் போதலை. பெரியவ காலேஜ் போறா சின்னவள் ப்ளஸ் டூ அதனால் இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சிருக்கு சீரியல்ல வந்துட்டேன்.

அழகி சீரியல் எனக்கு நல்ல பேரை வாங்கி கொடுத்திருக்கு. சில மாதங்களுக்கு முன் தி.நகர் பக்கம் ஷாப்பிங் போயிருந்தேன். கஸ்டமர்ஸ்ல இருந்து சேல்ஸ் கேர்ள்ஸ் வரைக்கும் 'சுந்தரி'யைக் கொண்டாடினது, எனக்கே சர்ப்ரைஸ்.

'சுந்தரி மேடம்... நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க..?! வீட்டு வேலை, ஹாஸ்பிட்டல் வேலை, பெட்ரோல் பங்க் வேலைனு ஒவ்வொரு நாளும் அவ்வளவு உழைக்கிறீங்க. சோர்ந்து போகும்போதெல்லாம், 'சுந்தரியைவிடவா..?'னு உங்களைத்தான் நினைச்சுக்கிறோம்...'னு ஒரு பணிப்பெண் சொன்னப்போ, தொடர் ஆரம்பிச்ச சில மாசத்துல இப்படி ஒரு ரீச்சானு ஆச்சர்யமா, சந்தோஷமா இருந்தது.

நானும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் அதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து இந்த சீரியலில் நடிக்கிறேன் என்று கூறினார் விஜி சந்திரசேகர்.

ஒரு முக்கிய செய்தி: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜி நடித்திருக்கிறாராம். வீட்டில் விஜி சந்திரசேகர் ஸ்டிரிக்ட் அம்மா என்று கூறுகின்றனர்.

விஜியின் பெரிய பெண் சுரக்ஷா எம்.பி.பி.எஸ் மாணவியாம். சின்னபெண் லல்லின் ப்ளஸ் ஒன் படிக்கிறாராம். இருவருக்கும் செல்போன் வாங்கி கொடுத்தது கிடையாதாம். டிவி சேனல்ஸ் பார்க்க தடை விதித்துள்ளாராம். பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களில் எல்லாம் அவர்களுக்கு நட்பு வட்டம் கிடையாதாம். இப்போதைக்கு படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்று கூறி குழந்தைகளை வளர்க்கிறாராம்.

பொறுப்பான அம்மாதான்!