டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று கலந்து கொண்டார்.
இந்த விழாவுக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் அழைத்ததோடு, அரசு அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார் நரேந்திர மோடி.
ஆனால் இந்த விழாவில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தமிழர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.
எனவே இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. லிங்கா படப்பிடிப்புக்காக மைசூரிலேயே தங்கிவிட்டார் ரஜினி.
அவருக்குப் பதிலாக அவர் மனைவி லதா செல்வார் என்று கூறப்பட்டது.
ஆனால் விழா நடந்த குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பங்கேற்றார். தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் ஐஸ்வர்யாவை சில முறை காட்டினார்கள். அவர் தனியாகவே அமர்ந்திருந்தார். அருகில் லதாவோ, கணவர் தனுஷோ இல்லை.
லதா ரஜினி விழாவுக்குச் சென்றாரா என்று அவரது இல்லத்தில் விசாரித்த போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.
இதன்மூலம் விழாவுக்கு லதா சென்றாரா இல்லையா என்பதை வெளியில் சொல்ல ரஜினி குடும்பம் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.