
சிறிய பட்ஜெட் படம்... ஆனால் பெரிய பேனரில் வெளியாகப் போகிறது. காரணம் மைனா படத்தின் கதைதான். இயல்பான கிராமத்து கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:-
* கொக்கி, லீ, லாடம் படங்களைத் தொடர்ந்து டைரக்டர் பிரபுசாலமன் இயக்கியிருக்கும் புதிய படம்தான் மைனா.
* கிட்டத்தட்ட 1000 கி.மீ. தூரம் நடந்து, தேனி, உப்பாரை, மூணாறு, இடுக்கி, பெரியகுளம் பகுதியில் படப்பிடிப்பு படத்தியுள்ளனர். படத்தின் முக்கிய பகுதி குரங்கனி கிராமம். போடியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. யூனிட், வண்டி, லைட், எக்யூப்மெண்ட் ஏதும் வாகனத்தில் எடுத்துச் செல்ல இயலாத இடம். நடைபயணத்தின் மூலம் தோளில் சுமந்து சென்றே பல பகுதிகளில் படத்தை பதிவு செய்துள்ளனர்.
* இயற்கை வெளிச்சத்தில், காலை 8 மணி தொடங்கி, மாலை 4.30 மணி வரையே படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். 78 நாட்கள் கடும் உழைப்போடு படத்தை முடித்துள்ளனர்.
* குரங்கனி கிராமத்தை சேர்ந்த 9 புதுமுகங்கள் படத்தில் நடித்துள்ளனர்.
* படத்தின் கதாநாயகன் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற விதார்த் என்றாலும், சாலமனின் முந்தைய படங்களில் சின்ன ரோலில் நடித்ததால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
* மைனா வழக்கமான தமிழ் சினிமாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத, உணர்ச்சிகள் நிறைந்த நிஜமான பதிவாகும். படம் முடிந்து வெளியில்வரும்போது அந்த கதையும், அந்த களமும் நம்மை திரும்பத் திரும்ப அசைபோட வைக்குமாம்.
* இசையமைப்பாளர் இமான் பின்னணி இசைக்கு மட்டும் 58 நாட்கள் எடுத்துக் கொண்டாராம்.
* வழக்கமான தமிழ் சினிமாவின் பாடல்களைப் போல் அல்லாமல், கதையோடு செல்லும்படியாக பாடல்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு ரீலில் 2 பாடல்களைக் கூட பயன்படுத்தியிருக்கிறார்கள்.
* இந்த படம் 3 நாட்களில் நடக்கிற கதையாம். இதை இரண்டே கால் மணி நேரம் உயிரை எடுக்கும் உணர்வாக படமாக்கியிருக்கிறார்கள்.
* பிறமொழி பெயர்ப்பில், உயிர் இல்லாமல் போய்விடும் என்று நினைத்தவர்களுக்கு, தெலுங்கில் ரீலிஸ் செய்ய வற்புறுத்தல்கள் இருந்ததால், தீபாவளிக்கு 3 வாரம் கழித்து தெலுங்கு பேசவிருக்கிறது இந்த மைனா.