ரூ.3 லட்சம் கொடுத்து புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய ஆமிர்கான்!


மும்பை: தனது புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர்கான்.

பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். ஓய்வு நேரங்களில் கார்களில் பயணம் செய்வது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஏற்கனவே அவரது வீடுகளை பல முன்னணி நிறுவனங்களின் காஸ்ட்லி கார்கள் அலங்கரித்து வருகின்றன.

இந்த நிலையில், புதிய ரோல்ஸ்ராய்ஸ் காரை சமீபத்தில் வாங்கியுள்ளார் ஆமிர்கான். இந்த கார் நேற்று மும்பை சதராவிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. ஏஜென்ட் ஒருவர் அந்த காரை பதிவு செய்வதற்காக ஆர்டிஓ அலுவலகம் கொண்டு வந்திருந்தார்.

ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சில்வர் நிற ரோல்ஸ்ராய்ஸ் காரை, அங்கு வந்த பொதுமக்கள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். அந்த கார் அட்விட்டல் போஸ்ட் ஸ்டூடியோஸ் லிமிடேட், 7டி, சில்வர் வாலி சொசைட்டி, மஹாபலேஸ்வர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்த காருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார் ஆமிர்கான். மேலும், அந்த காருக்கு ரூ.47 லட்சம் வரியாக செலுத்தப்பட்டுள்ளது.

இதனை, சதரா ஆர்டிஓ அலுவலர் வி.ஆர்.குஜராத்தி உறுதிப்படுத்தினார். அந்த காருக்கு “எம்எச் 11 ஏஎக்ஸ்1″(MH 11 AX 1) என்ற பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. ஆமிர்கானின் வேண்டுகோளின்பேரில் ’1′ம் எண் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

'கன்னிகளுடன்' கலக்கும் ஈவா லோங்கோரியா!


டெஸ்பரேட் ஹவுஸ்ஒயிப்ஸ் கதையில் ஆண்களுக்காக அலையும் பெண் வேடத்தில் நடித்த ஈவா லோங்கோரியா, வித்தவுட் மென் என்ற படத்தில் பெண்களுடன் செக்ஸ் விளையாட்டுக்களில் ஈடுபடும் கவர்ச்சிக் கதையில் நடித்துள்ளாராம்.

இந்தப் படத்திற்காக இப்படிப்பட்ட வேடத்தில் நடித்தபோது தனக்கு பதட்டமாகவும், வெட்கமாகவும் இருந்ததாகவும் கூறுகிறார் ஈவா.

வித்தவுட் மென் என்ற படத்தின் கதை வித்தியாசமானது. ஈவாவின் ஊரைச் சேர்ந்த ஆண்களை, ஒரு கொரில்லாப் படை, தனது படைக்குத் தேவை என்று கூறி ஆண்களை தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். இதனால் ஈவாவும், அவரது ஊர்ப் பெண்களும் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர். ஆண்களே இல்லாமல் போகும் நிலையில் சிக்கியஅவர்கள், மனதை தேற்றிக் கொண்டு ஆண்களின் வேலைகளை அவர்களே செய்யத் தொடங்குகிறார்கள்-செக்ஸிலும்.

அந்த ஊரின் தலைவியாக வருகிறார் ஈவா. இப்படத்திற்காக பெண்ணுடன் செக்ஸ் விளையாட்டுகளில் ஈடுபடும் காட்சிகளில் ஈவா நடித்துள்ளார். அவருடன் இணைந்து கவர்ச்சிகரமாக நடித்திருப்பவர் கேட் டெல் கேஸ்டிலோ.

உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிடுவது உள்ளிட்ட மிகவும் நெருக்கமான காட்சிகளில் ஈவாவும், கேட்டும் நடித்துள்ளனர். இதுகுறித்து ஈவா கூறுகையில், அந்தக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மிகவும் வெட்கமாகவும், நடுக்கமாகவும் இருந்தது. என்னால் சிரிப்பை அடக்கவும் முடியவிலல்லை. அப்படிப்பட்ட காட்சிகளைப் படமாக்கியபோது காட்சி முடியும் வரை சற்று பதட்டமாகவே இருந்தது. இருப்பினும் எதிர்பார்த்தது போலவே அந்தக் காட்சிகள் சற்று சூடாகவே வந்துள்ளன என்கிறார் ஈவா.

ஹாலிவுட்டில் ரொம்பத்தான் தைரியமாக காட்சிகளை வைக்கிறார்கள்…!

 

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் வேண்டாம்-வித்யா பாலன் கண்டிஷன்


மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் சில்க் வேடத்தில் நடித்து வரும் வித்யா பாலன், எந்த வகையான காஸ்ட்யூமும் தனகக்கு ஓ.கேதான் என்று கூறியுள்ளாராம் – ஒரே ஒரு நிபந்தனையுடன்.

அந்த நிபந்தனை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்பதாம். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமாக்கி வருகிறார்கள். இதில் சில்க் வேடத்தில் நடித்து வருகிறார் வித்யா பாலன்.இதற்காக கவர்ச்சிகரமான டிரஸ்களிலும் இவர் படத்தில் காட்சி தருகிறார்.

தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறதாம். படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம் என்ன மாதிரியான காஸ்ட்யூமைக் கொடுத்தாலும் பரவாயில்லை, எனக்கு ஓ.கே.தான். ஆனால் ஸ்லீவ்லெஸ் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளாராம் வித்யா.

ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாமாம்? ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும, பட்டவர்த்தனமாக தெரியும். அதை தான் விரும்புவதில்லை என்கிறார் வித்யா பாலன்.

சில்க்குக்கு இணையாக இதுவரை யாரையும் திரையுலகம் கண்டதில்லை. அந்த இடத்தை வித்யா பாலன் நிரப்புவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

கன்னடப் படத்தில் நடிப்பதற்காக காத்திருக்கும் சமீரா ரெட்டி


இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள சமீரா ரெட்டி கன்னடப் படங்களில் நடிப்பதற்காக காத்திருக்கிறாராம்.

பாலிவுட் நடிகையாக இருந்து வந்த சமீரா ரெட்டி இப்போது தென்னிந்திய நடிகையாகவும் மாறி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மனக்கிடக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அது கன்னடப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் சிறு வயதில் கன்னடப் படங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் நடிகையாகி இத்தனை காலமாகி விட்டது, ஆனால் என்னைத் தேடி ஒரு கன்னடப் படமும் வரவில்லை என்பது வியப்பாக உள்ளது.

அத்தனை மொழிப் படங்களிலும் என்னைக் கேட்கிறார்கள். கன்னடத்தில்தான் யாரும் இன்னும் அணுகவில்லை. நான் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சரியான வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சியோடு நடிப்பேன் என்றார் சமீரா.

 

கவர்ச்சிக்கும் அஞ்சலி ரெடி!


அஞ்சலியும் கவர்ச்சிக் களத்தில் குதித்து விட்டார். இதுவரை கவர்ச்சிப் பக்கம் தலை சாய்க்காமல் இருந்து வந்த அவர், போட்டியின் கடுமையை உணர்ந்து அவரும் கவர்ச்சிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளாராம்.

கற்றது தமிழ் படம் மூலம் நடிகையாக அறிமுகமான அஞ்சலி, பின்னர் அங்காடித் தெரு அஞ்சலியாக மாறிப் போனார். அந்த அளவுக்கு அங்காடித் தெரு அஞ்சலிக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. இப்போது கை நிறையப் படங்களில் நடித்து வரும் அஞ்சலி, கவர்ச்சிக்கும் வழி திறந்து விட்டுள்ளார்.

இதுவரை கவர்ச்சியாக நடிக்க அவர் ஒத்துக் கொண்டது கிடையாது. அது தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று கூறி வந்தார். ஆனால் தற்போது கதையுடன் கூடிய கவர்ச்சி காட்ட தனக்கு தயக்கம் இல்லை என்று கூற ஆரம்பித்துள்ளாராம்.

ஏகப்பட்ட ஹீரோயின்களின் வருகை, பல புதுமுகங்களின் குவியல் என போட்டி கடுமையாக இருப்பதால் பீல்டில் நிலைத்திருப்பதற்காக இந்த கவர்ச்சி முடிவுக்கு வந்துள்ளாராம் அஞ்சலி.

கவர்ச்சியாக நடிக்க தான் தயாராக இருந்தாலும் கூட கதையம்சத்துடன் கூடிய படங்களில் மட்டுமே தொடர்நது நடிப்பேன், வெறும் கவர்ச்சியை மட்டும் நம்பி நடிக்க மாட்டேன் என்றும் அஞ்சலி கூறுகிறார்.

 

சீமான் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் உள்ளன-விஜயலட்சுமி


இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மீது புகார் கூறியுள்ள நடிகை விஜயலட்சுமி, தன்னுடன் சீமான் குடும்பம் நடத்தியது தொடர்பாக 700 ஆதாரங்களை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் சீமானுக்கு கேக் ஊட்டுவது போல காட்சிகள் உள்ளன.

3 வருடமாக தன்னைக் காதலித்து விட்டு இப்போது திருமணம் செய்ய சீமான் மறுப்பதாக விஜயலட்சுமி புகார் கூறியுள்ளார். இது காலப்போக்கில் அப்படியே மறைந்து போய் விட்டது. இந்தநிலையில் திடீரென சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

அவர் என்னுடன் குடும்பம் நடத்தியதற்கு 700 ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. மதுரையில் அவருடன் நான் 15 நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளேன். 3 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்து விட்டு என்னைத் தூக்கிப் போட்டு விட்டார் சீமான் என்று கூறியுள்ளார் விஜயலட்சுமி.

சீமானுடன் இருப்பது தொடர்பாக விஜயலட்சுமி வெளியிட்டுள்ள படங்களால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

எந்திரன் கதைத் திருட்டு-கதை உரிமைக்காக போராடும் ஆரூர் தமிழ்நாடனுக்கு நீதி கிடைக்குமா?


சென்னை: எந்திரன் கதைத் திருட்டு தொடர்பாக கடந்த திமுக ஆட்சியின்போது வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், கடந்த திமுக ஆட்சியில்தான் தனக்கு நீதி கிடைக்கவில்லை, இப்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்த நிலையில், கதைத் திருட்டு தொடர்பாக சன் டிவி நிறுவன அதிபர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட் மறுத்து விட்டது. இதுதொடர்பான மாறன், ஷங்கரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. வழக்கு செப்டம்பர் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கலாநிதி மாறன், ஷங்கர் தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியத் திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய படம் ரஜினிகாந்த் நடித்து, சன் பிக்சர்ஸ், தயாரித்து, ஷங்கர் இயக்கி வெளியான எந்திரன். இந்தப் படத்துக்காக மெகா பிரமாண்டமாக விளம்பரம் செய்தது சன் டிவி. சன் டிவியின் எந்த சானலைத் திறந்தாலும் எந்திரன் தான்.

ஆனால் இந்தப் படத்தின் கதை என்னுடையது, கதையைத் திருடி விட்டார்கள் என்று கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கிளம்பியபோது இதை விட அதிக பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். அதில், எனது ஜூகிபா கதையை அப்படியே திருடி, ஸ்கிரீன் பிளே செய்து, சினிமா சமாச்சாரங்களான பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் உத்திகள் போன்றவற்றை சேர்த்து எந்திரன் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

இந்தக் திருட்டுக்கதையை தயாரிப்பாளராக இருந்து படமாக வெளியிட்டிருக்கிறார் கலாநிதிமாறன்.

எந்திரன் படக்கதையை எதனது கதை என்று அறிவிக்க வேண்டும். எனது அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கதையைத் திருடி படம் எடுத்தற்காக இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று வழக்கில் கோரியிருந்தார் தமிழ்நாடன்.

மேலும், கலாநிதி மாறன், ஷங்கர் ஆகியோர் கூட்டுச் சதி செய்து கதையைத் திருடி சுயலாபம் பார்த்துள்ளனர். எனவே அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அப்போதைய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகாரும் கொடுத்தார்.

ஆனால் அப்போது நடந்தது திமுக ஆட்சி. சன் டிவி தரப்பின் மீது கை வைக்க முடியாத நிலையில் காவல்துறை அப்போது இருந்தது. இதனால் புகார் கொடுக்க வந்த தமிழ்நாடனிடம், கலாநிதி மாறன் பெயரை நீக்கினால்தான் புகாரையே பதிவு செய்வோம் என்று காவல்துறை கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து எழும்பூர் பெருநகர கோர்ட்டில் தனி நபர் வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். இதை விசாரித்த கோர்ட், கலாநிதி மாறனையும், ஷங்கரையும் நேரில் வந்து ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பியது.

அதிர்ச்சி அடைந்த கலாநிதி மாறனும், ஷங்கரும் இதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கி தப்பினர்.

இந்த நிலையில் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு எழும்பூர் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்காலத் தடையை காரணம் காட்டிய கலாநிதி மாறன், ஷங்கர் தரப்பு, வழக்கையும் தள்ளுபடி செய்யக் கோரியது.

ஆனால், தாங்கள் இடைக்காலத் தடையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தமிழ்நாடன் வக்கீல் தெரிவித்தார். அதை ஏற்ற கோர்ட், கலாநிதி மாறன், ஷங்கர் கோரிக்கையை நிராகரித்தது. மேலும் வழக்கு செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

எந்திரன் பட வசூல் மோசடி-பைனான்சியர் அழகர், சக்சேனா கூட்டாளி ஐயப்பன் கைது


எந்திரன் பட விநியோக மோசடி விவகாரத்தில் ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் கூட்டாளியான ஐயப்பன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் திரைப்பட பைனான்சியர் அழகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகை தனது கரன்சிக் கட்டுக்குள் சிக்க வைத்திருப்பவரான மதுரையைச் சேர்ந்த பிரபல பைனான்சியர் அன்புச் செழியனின் தம்பிதான் இந்த அழகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3.53 கோடி பணத்தைத் தராமலும், மிரட்டல் விடுத்து வந்தது தொடர்பாகவும் இருவரையும் கே.கே.நகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கி வரும், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் கணேசன். இவர், சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை நேற்று அளித்தார்.

அதில், சென்னை, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில், எந்திரன் படத்தை வினியோகிப்பதற்கான உரிமையை, சன், பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்து ஜெமினி பிலிம் சர்க்யூட் பெற்றது.

இப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களில், சக்சேனாவின் கூட்டாளி ஐயப்பன் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சகோதரர் அழகர் ஆகியோர் மூலம், எந்திரன் படம் வெளியிடப்பட்டது.

அப்பகுதிகளில் படம் திரையிடப்பட்டு,8 கோடி ரூபாய் வசூலானது. வசூல் தொகையில், 4.47 கோடி ரூபாயை மட்டும் தந்துவிட்டு, மீதமுள்ள 3.53 கோடி ரூபாயை கேட்டபோது, ஐயப்பனும், அழகரும் தர மறுத்ததுடன், மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதை விசாரித்த போலீஸார் அழகரை கைது செய்தனர். ஐயப்பன் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கிறார். அவரை புதிய வழக்கில் கைது செய்ததற்கான ஆவணங்களை போலீஸார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.