சென்னை: கேரளாவின் ஆள்நடமாட்டமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பெரும் இடையூறுகளைத் தாண்டி படமாக்கப்பட்டுள்ளதாம் பாபி சிம்ஹாவின் "உறுமீன்" திரைப்படம்.
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டி.டில்லிபாபு தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் உறுமீன்.
இதில் ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா நாயகனாகவும், மெட்ராஸ் புகழ் கலையரசன் வில்லனாகவும் நடிக்கின்றனர். நாயகியாக ரேஷ்மிமேனன் நடிக்க முக்கிய வேடங்களில் அப்புக்குட்டி, காளிவெங்க, மனோபாலா ஆகியோர் நடிக்கின்றனர்.
சக்திவேல் பெருமாள்சாமி இதனை இயக்கியுள்ளார். அச்சு இசையமைக்க இந்தப் படத்துக்கு ரவீந்திரநாத்குரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இரண்டு வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் திரைக்கதை இன்றைய பொருளாதார பின்னணியை மையமாகக் கொண்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் உச்சகட்ட காட்சி கேரளாவின் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இதற்குமுன் இத்தகைய இடங்களில் யாரும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தை மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக படத்தின் டிரைலரினை ஜனவரி இறுதி வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மியான்மர் ஆகிய இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது.