சென்னை: ஒரு வழியாக மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஞ்சலி. புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.
படத்தை இயக்குபவர் தலைநகரம், மருதமலை, படிக்காதவன் (தனுஷ்) படங்களை இயக்கிய சுராஜ்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகள். இவர்களில் ஒரு நாயகியாகத்தான் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை இயக்குநர் சுராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
சித்தி கொடுமையால், சென்னையில் உள்ள சொந்த வீட்டைவிட்டு ஹைதராபாத்துக்கு போனார் அஞ்சலி. தனது சொத்துக்களையெல்லாம் இயக்குநர் களஞ்சியமும் தன் சித்தியும் அபகரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். பின்னர் திடீரென சில தினங்கள் தலைமறைவாகி பரபரப்பு கிளப்பியவர், ஒரு வழியாக திரும்பி வந்தார்.
சில தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்தார். சென்னைப் பக்கமே வரவில்லை. தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. சென்னையில் அவர் தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகவில்லை. அவர் கோரிக்கையின் பேரில் நீதிமன்றமும் விலக்களித்துவிட்டது.
இந்த நிலையில் இயக்குநர் களஞ்சியம், தன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டு, பின்னர் நடிக்க மறுக்கிறார் என அஞ்சலி மீது போகுமிடமெல்லாம் புகார் வாசிக்க ஆரம்பித்தார். இயக்குநர் சங்கத்திலும் புகார் தந்துள்ளார். அஞ்சலி எந்தப் படத்தில் நடித்தாலும் பிரச்சினை பண்ணுவேன் என்று அறிக்கைவிட்டார்.
ஆனால் அஞ்சலியோ, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுவிட்டேன். தமிழ்ப் படங்களில் இனி நடிப்பேன், என பதில் அறிக்கை விட்டார்.
இதனைத் தொடர்ந்துதான் அஞ்சலியை ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் சுராஜ்!