சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கும் இயேசு படம்... முக்கிய வேடத்தில் அனுஷ்கா!


தமிழில் கமலுடன் இணைந்து பல மறக்கமுடியாத படங்களைத் தந்தவர் தேசிய விருது பெற்ற இயக்குநரான சிங்கீதம் சீனிவாசராவ்.

ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் என இவர் இயக்கிய ஒவ்வொரு படமும் வசூல் மற்றும் பாராட்டுக்களைக் குவித்தவை.

சிங்கீதம் சீனிவாச ராவ் கடந்த இரண்டாயிரத்து எட்டில் ‘கடோத்கஜ்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி அந்த படம் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 வருட இடைவெளிக்குப் பிறகு, அடுத்து குழந்தைகளுக்கான ஒரு படத்தை இயக்குகிறார். இதில் அனுஷ்கா, நாகார்ஜுனாவும் நடிக்கிறார்கள்.

இயேசுவின் குழந்தைப் பருவத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஒன்பது முதல் பதிமூன்று வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் நடிக்கின்றனர். இயேசு வாழ்ந்த அதாவது அவர் பயணப்பட்ட அந்தந்த இடங்களுக்கே சென்று படமாக்க இருக்கின்றார். படத்தின் பெயர் 'பிரின்ஸஸ் ஆப் பீஸ்'. தமிழில் சமாதானத்தின் இளவரசன்.

குழந்தைகளை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் நாகார்ஜுனாவும், அனுஷ்காவும் நடிக்க உள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய ஆறு மொழிகளில் உருவாக இருக்கிறது.
 

மதுரையில் நாளை விஜய் மக்கள் இயக்க மாநாடு... ரசிகர்கள் மூலம் 'வேலாயுதம்' பாடல் வெளியீடு!


விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இதுகுறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.
 

சல்மான்கானுக்கு முக நரம்பில் பாதிப்பு- சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்


மும்பை: இந்தி நடிகர் சல்மான் தனது தாடை நரம்பு சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல முடிவு செய்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் தாடையில் கடும் வலி இருந்து வருகிறது. ஆனால், அதை வெளியிடாமல் இருந்த சல்மான் கான் சமீபத்தில் அதுகுறித்து ஒரு வெளியில் சொன்னார்.

இந் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவும் முடிவு செய்துள்ளார். தாடையில் ஏற்படும் கடும் வலியினால் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டதாகவும், சமீபகாலமாக அந்த வலி அதிகரித்து விட்டதால், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக மும்பையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூளையில் இருந்து முகத்துக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக வாயை திறந்தாலே தாடையில் தாங்க முடியாத வலி ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
 

சரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்!


ஊமைப் படமாக இருந்த காலத்திலும் சரி, பேசும் படமாக அது பரிணமித்த கட்டத்திலும் சரி... தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன.

தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன.

ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய்விட்டன.

ஆனால் 2000-க்குப் பிறகு மீண்டும் சரித்திரப் படங்கள் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் பழைய காலத்தைப் போலல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் நம்பகத் தன்மை, பிரமாண்டம் அனைத்தும் கலந்த வகையில் இந்தப் படங்கள் வந்தன.

இந்தி, தெலுங்கிலும் இந்த நிலைதான் நீடித்தது. தெலுங்கில் மகாதீரா வெற்றிக்குப் பிறகு பல படங்கள் அதே பாணியில் தயாராகின்றன. தெலுங்கில் ராமாயணம் ஸ்ரீராம ராஜ்யமாக பிரமாண்டமாகத் தயாராகிறது.

தமிழில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் பெற்ற வெற்றி அனைவரையுமே கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டது.

இந்த 2011-ல் தயாராகும் பல படங்கள் சரித்திர அல்லது புராண காலகட்டத்தைச் சேரந்த படங்களாகவே உள்ளன.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க ரூ 130 கோடியில் உருவாகும் ராணா படம் முழுக்க முழுக்க சரித்திரக் கதைதான். இதில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஏழாம் அறிவு கதையும் சித்தர்கள் காலத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்கள். போகர் என்ற சித்தர் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம் என்கிறது கோடம்பாக்கம் வட்டம். படத்தின் ஸ்டில்களும் அதைத்தான் காட்டுகின்றன.

விக்ரம் நடிக்கும் கரிகாலன் படம் முழுக்க முழுக்க சரித்திரப் பின்னணி கொண்டது. ஆங்கிலத்தில் வெளியான ட்ராய், கிளாடியேட்டர் மாதிரியான அதிரடி ஆக்ஷன் வரலாற்றுப் படம் இது.

சிம்புதேவன் - தனுஷ் இணையும் மாரீசன், கிமு 12-ம் நூற்றாண்டுக் கதை. கிட்டத்தட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.

சற்குணம் இயக்கும் வாகை சூடவா, சமகால வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இப்போதைக்கு இந்தப் படம் தள்ளிப்போடப்பட்டாலும் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாகும் என அவர் குறிப்பிட்டிருப்பது நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

பாரதிராஜா இயக்கிவரும் அன்னக் கொடியும் கொடிவீரனும் கூட ஒரு சரித்திரக் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் செல்வராகவன், மிஷ்கின், கமல்ஹாஸன் போன்றவர்களும் சரித்திரப் படம் எடுப்பதற்கான ஆயத்தங்களில் உள்ளனர். மதராஸப்பட்டணம் தந்த இயக்குநர் விஜய்யும் கூட விரைவில் அடுத்த சரித்திரப் பட ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்துள்ளார்.

சரித்திரப் படம் எடுப்பது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனாலும் இளம் இயக்குநர்கள் அதில் உள்ள சவாலை விரும்பி ஏற்று சரித்திரப் படம் பண்ணுவது, இந்த கலை மீது அவர்களுக்குள்ள பிடிப்பைக் காட்டுகிறது. இன்னொன்று, முன்பு பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்கள் தங்கள் கிராமத்து அனுபவங்களை அப்படியே செல்லுலாய்டில் செதுக்கித் தந்தார்கள். இன்றைய படைப்பாளிகள் பலருக்கு அந்தப் பின்னணியோ, ஆழந்த அனுபவமோ இருப்பதில்லை.

எனவேதான் ஏற்கெனவே தயாராக உள்ள சரித்திரக் கதைகளை தொழில்நுட்ப பிரமாண்டம் சேர்த்துக் கொடுத்து மக்களை ஈர்க்க முயற்சிக்கின்றனர்.

எப்படிப் பார்த்தாலும் இந்த ஆண்டு மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட சரித்திரப் படங்கள் வரவிருக்கின்றன. சரித்திரத்தின் மீது இந்த தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே இந்த நிலைக்குக் காரணம் என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

சொல்லும் விதத்தில் சொன்னால் நிச்சயம் சரித்திரம் இனிக்கவே செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்!
 

இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!


சென்னை: மீண்டும் தனது முதல் கணவர் ஆகாஷுடன் இணையப் போவதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

நடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.

தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம்.

இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:

என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறேன். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன்.

ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.

எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். இருவரும் சேர்ந்து என் குழந்தையை வளர்க்க விரும்புகிறோம்.

என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்," என்றார்.

மேலும், இதுவரை வனிதா ராஜன் என்று இருந்த தன் பெயரை இப்போது, வனிதா விஜயகுமார் என்றே மாற்றிக் கொண்டுள்ளார் வனிதா.
 

நடிகை மினிஷா லம்பாவிற்கு 2 முறை கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்


பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பாவிற்கு மர்மநபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தி ந்டிகை மினிஷா லம்பா யான், கிட்னாப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கவர்ச்சியான நடிப்பிற்கு ரசிகர்கள் அதிகம். மினிஷா, நியூயார்க்கில் நடக்கும் விழா கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் மினிஷாவின் மொபைல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், நியுயார்க்கில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது. மீறி கலந்து கொண்டால், கொலை செய்துவிடுவேன், என மிரட்டியுள்ளார். முதலில் வெளிநாட்டில் இருந்தும், பின்னர் இந்தியா நம்பர் ஒன்றில் இருந்தும் அழைப்பு வந்ததாக நடிகை தெரிவித்துள்ளார்.