சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் "கில்லிங்" வீரப்பன் டிரைலர் ரிலீஸ்

ஹைதராபாத்: சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் கில்லிங் வீரப்பன் பட டிரைலர் நேற்று வெளியானது.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் விதமாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார் ராம்கோபால் வர்மா.

Killing Veerappan Trailer Released

தெலுங்கு, கன்னட மொழிகளில் நேரடியாக படத்தை எடுத்துவரும் ராம் கோபால் வர்மா, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படத்தை டப் செய்து வெளியிட இருக்கிறார். நேற்று வெளியான படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொளிகளில் வெளியானது.

ஹிந்தி டிரைலர் வரும் 20ம் தேதி வெளியாகும் என்று ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கில்லிங் வீரப்பன் படத்தில் வீரப்பனைப் பிடிக்கத் துடிக்கும் அதிகாரியாக கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்திருக்கிறார்.

Killing Veerappan Trailer Released

வீரப்பனாக அறிமுக நடிகர் சந்தீப்பை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. தெலுங்கில் வெளியான டிரைலரை இதுவரை சுமார் 50,000 ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர்.

 

ஒரு கோடி, ரெண்டு கோடியல்ல... 160 கோடி!- சூப்பர் டைரக்டரான ராஜமவுலி!!

பாகுபலி படம் கடந்த மூன்று தினங்களில் வசூல் செய்த தொகை எவ்வளவு என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் உலகம் முழுக்க ரூ 160 கோடியைக் குவித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Rajamouli becomes the super director of Indian Cinema

இந்தியாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ‘பாகுபலி'. கடந்த வெள்ளியன்று தமிழகம் முழுவதும் 550 தியேட்டர்களிலும், உலகம் முழுவதும் 4000 க்கும் அதிகமான தியேட்டர்களிலும் ரிலீசானது.

முதல் நாளிலேயே ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து இந்த படம் சாதனை படைத்தது. இந்தியப் படங்கள் எதுவும் இவ்வளவு வசூலித்ததில்லை. அடுத்த நாள் வசூல் ரூ.115 கோடியை எட்டியது.

நேற்று மூன்றாவது நாளில் மட்டும் மொத்த வசூல் 160 கோடியைத் தொட்டது.

இதற்கு முன்பு வெளிவந்த எந்திரன், பி.கே, சென்னை எக்ஸ்பிரஸ், க்ரிஷ், லிங்கா, உள்ளிட்ட படங்கள் மூன்றாவது நாளில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளன. ஆனால் இரண்டே நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த இந்திய படம் ‘பாகுபலி' ஒன்றுதான்.

இந்த சாதனை இயக்குநர் ராஜமவுலியால் மட்டுமே சாத்தியமானது என்றால் மிகையல்ல. இந்தப் படத்தைப் பொருத்தவரை ராஜமவுலிக்காக மட்டுமே இவ்வளவு கோடிகள் செலவழிக்கப்பட்டது. அப்படி செலவழித்த தொகையை மிகச் சரியாகப் பயன்படுத்தி ஒரு காவியத்தை திரையில் படைத்திருக்கிறார் ராஜமவுலி. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அவருக்குத் தந்த அபார ஒத்துழைப்பு, இந்த சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது.

இன்று இந்திய சினிமாவின் சூப்பர் இயக்குநராக ராஜமவுலியைப் பார்க்கிறது சர்வதேச சினிமா!

 

வைரமுத்துவுக்கு கருணாநிதி, ரஜினி பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் வைரமுத்துவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தனது பிறந்த நாளையொட்டி இன்று காலை அண்ணா நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார் கவிஞர் வைரமுத்து. கடற்கரைச் சாலையில் உள்ள கம்பர், இளங்கோவடிகள், பாரதியார், திருவள்ளுவர், பாரதிதாசன், அவ்வையார், வீரமா முனிவர் போன்றோர் சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார்.

Karunanidhi, Rajini wish Vairamuthu

தியாகராய நகரில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்றார். அங்கு கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வைரமுத்துவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலளர் வைகோ, மு.க.ஸ்டாலின், ஜி.ராமகிருஷ்ணன் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோரும் போனில் வாழ்த்து கூறினார்கள். நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று வாழ்த்தினர்.

1980-ம் ஆண்டு நிழல்கள் படத்தில் இளையராஜா - பாரதிராஜாவால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வைரமுத்து. இது ஒரு பொன்மாலை பொழுது.. பாடல்தான் அவரது முதல் பாட்டு.

இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி உள்ளார். 6 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

 

ஓரம் கட்டப்பட்ட சல்மானின் பஜ்ரங்கி பைஜான்.. பதம் பார்க்கும் பாகுபலி

மும்பை: ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே கொண்டாடிக் கொண்டு இருக்கும் படமாக பாகுபலி மாறியிருக்கிறது, வெளியான நாள் முதலே வசூலில் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது படம்.

இன்னும் 1 மாத காலத்திற்கு பகுபலியின் தாக்கம் இந்தியாவில் இருக்கும் என்று ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். பாகுபலி படம் இந்தியா முழுவதும் வெளியானதால் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருந்த பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Rajamouli’s Baahubali Directly Affect Salman’s Bajrangi Bhaijaan

இந்நிலையில் வரும் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஹிந்தியில் சல்மானின் படங்களுக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் இந்தமுறை அந்த எதிர்பார்ப்பு பாகுபலியால் தடைபட்டு இருக்கிறது, ஆமாம் பாகுபலி திரைப்படம் ஹிந்தி மொழியில் வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனால் பல மல்டிபிளக்ஸ் அரங்குகளில் சல்மான்கானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் தயங்குகிறார்கள், பாகுபலியால் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

அப்படி இருக்கும்போது பஜ்ரங்கி பைஜானை எப்படித் திரையிட முடியும், என்று கேள்வி எழுப்புகின்றனர். இதனால் எதிர்பார்த்த திரையரங்குகள் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அப்படியே திரையரங்குகள் கிடைத்தாலும் சல்மான் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை! - எஸ்எஸ் ராஜமவுலி

பாகுபலி படம் இத்தனை பெரிய வெற்றியைப் பெறும் என்று நிஜமாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது.

Rajamouli didn't expect this much success for 'Bahubali'

இந்திய சினிமா வரலாற்றில், தென்னிந்திய திரைப்படம் ஒன்று இத்தனை பிரமாண்டமாய் வெளியாகி, அதைவிட பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.

இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான இயக்குநர் ராஜமவுலி இந்த வெற்றியை பெரிதாகக் கொண்டாடவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பாகுபலி குறித்து வரும் செய்திகள், வசூல் விபரங்கள் எங்களுக்கே மலைப்பைத் தந்துள்ளது. இப்படி ஒரு பிரமாண்ட வெற்றியை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இந்தப் படம் ஒரு புதிய களம், புதிய அனுபவம் என்பதால் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஒரு புதிய உலகைக் காணும் ஆர்வத்தில் வருகிறார்கள். அடுத்த பாகம் இன்னும் சிறப்பாக வரும். அடுத்த ஆண்டு நிச்சயம் வெளியிட்டுவிடுவோம்," என்றார்.

 

செல்வராகவன் மனைவி இயக்கும் மாலை நேரத்து மயக்கம்... இந்த மாதம் முடிகிறது!

இயக்குநர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்குநராக அறிமுகமாகிறார். அவர் இயக்கி வரும் முதல் படமான இது மாலை நேரத்து மயக்கம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.

பீப் டோன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் செல்வராகவன்.

Maalai Nerathu Mayakkam nears final stage

தமிழ், தெலுங்கு மொழிகளில் 110க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் கோலா பாஸ்கர். செல்வராகவனின் பதினைந்து வருடகால நண்பரான இவர், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மாலை நேரத்து மயக்கம், இரண்டாம் உலகம் உட்பட செல்வராகவன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்கும் படத்தொகுப்பு செய்தவர்.

இப்படங்கள் தவிர போக்கிரி, வில்லு, யாரடி நீ மோகினி, 3 உட்பட பல வெற்றிப்படங்களில் பணியாற்றி உள்ள கோலா பாஸ்கர் முதன்முறையாக தயாரிக்கும் படம் - மாலை நேரத்து மயக்கம்.

இப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் பாலகிருஷ்ணன் நடிக்கிறார்.

கதாநாயகியாக வாமிகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

செல்வராகவன், கோலா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஆகியோரின் உதவியாளர்கள் மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமாகிறார்கள்.

செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றிய கீதாஞ்சலி செல்வராகவன் இப்படத்தை இயக்குகிறார்.

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உதவியாளரான ஸ்ரீதர் டி.எப்.ட்டி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோலா பாஸ்கரின் உதவியாளரான ரூபேஷ் இப்படத்துக்கு படத்தொகுப்பு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருப்பவர் செல்வராகவன்.

மாலை நேரத்து மயக்கம் படத்திற்கு, உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பம் தயாரித்த அம்ரித் இசையமைக்கிறார்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி வரிசையில் ஒரு ஜனரஞ்சகமான காதல் கதையாக உருவாகி வருகிறது - மாலை நேரத்து மயக்கம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மாலை நேரத்து மயக்கம் படத்தில் அறிமுகமாகும் வாமிகா, ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதமானது.

தற்போது அவரது கால்ஷீட் கிடைத்து, சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மூணாறில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. இம்மாத இறுதியில் இரண்டு பாடல்காட்சிகள் உடன் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. மாலை நேரத்து மயக்கம் படத்தின் இசைவெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

 

ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய விஷால்!

ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்கள் வழங்கினார் நடிகர் விஷால்.

நடிகர் விஷால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாயும் புலி' படத்தில் நடிக்கும் விஷால், சினிமாவைத்தாண்டி விஷால் தன்னுடைய நற்பணி மன்றம் சார்பாக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

Vishal donates 1 lakh notebooks to poor students

சமீபத்தில் இவர் திருச்சி மாவட்டம் விஷால் நற்பணி மன்றம் சார்பில் 10 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்கள் கொடுத்து திருமணம் நடத்தி வைத்தார்.

இப்போது தனது அகில இந்திய விஷால் நற்பணி மன்றம் சார்பாக ஏழை மாணவர்களுக்கு 1 லட்சம் நோட்டுப் புத்தகங்களை வழங்கியிருக்கிறார் விஷால்.

இவ்விழாவில் விஷாலுக்கு மாலை அணிவித்து அவருடைய ரசிகர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர் மாணவர்களுடன் படம் எடுத்துக் கொண்டு வாழ்த்தி அனுப்பி வைத்தார் விஷால்.

 

எந்திரன் 2... ரஜினிக்கு ஜோடி காத்ரீனா கைப்?

சென்னை: எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ம் பாகமான எந்திரன் 2வை எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ரஜினி தற்போது இயக்குநர் ரஞ்சித்தின் படத்தில் பிஸியாக இருக்கிறார்.

ரஞ்சித் படம் முடிந்ததும் ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இந்த வருடத்தின் இறுதியில் பட ஷூட்டிங்கைத் தொடங்கி, 2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இருக்கிறார் ஷங்கர்.

Endhiran 2 :  Katrina Kaif Fair With Rajini?

எந்திரன் 2 படத்திற்கான முன்னேற்பாடுகளில் பிஸியாக இருக்கும் ஷங்கர், கையோடு நாயகியையும் முடிவுசெய்து விடலாம் என்று காத்ரீனா கைப்பை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

காத்ரீனா கைப் உடனடியாக எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லையாம், ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு கோச்சடையான் படத்தில் கிடைத்தபோது காத்ரீனாவால் அதனை ஏற்க முடியாத ஒரு சூழ்நிலை அப்போது நிலவியது.

தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்துள்ளது, வாய்ப்பை ஏற்பாரா? அல்லது நழுவ விடுவாரா என்பது தெரியவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

பாகுபலி படத்தை ஹாலிவுட்காரங்க ரீமேக் செய்ய போறாங்களாமே

சென்னை: பாகுபலி திரைப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்திய சினிமா வரலாற்றில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி, கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகியுள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பிவருகிறது இத்திரைப்படம்.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஸ்டூடியோ நிறுவனம், பாகுபலியை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாம். இந்த தகவல், படத்தின் இயக்குநர் ராஜமவுலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இருப்பினும், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

பாகுபலி வெற்றியால், சல்மான்கான் நடித்து இவ்வார இறுதியில் வெளியாக உள்ள பஜ்ரங்கிபைஜான் திரைப்படத்தின் வினியோகஸ்தர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

 

"பில்லா 2".. 3ம் ஆண்டு ரிலீஸ் தினத்தை டிவிட்டரில் கொண்டாடும் அஜீத் ரசிகர்கள்

சென்னை: 3 வருடங்களுக்கு முன்னால் ஒரு சுபயோக சுபதினத்தில் அஜீத்தின் பில்லா 2 படம் வெளிவந்தது, படம் அந்த அளவுக்கு சொல்லிக்கொள்ளும் படி ஒன்றும் ஓடவில்லை தான்.

ஆனால் பில்லா 2 படம் வெளிவந்து இன்றோடு 3 ஆண்டுகள் ஆகின்றன என்று ட்விட்டரில் #3YearsOfBilla2 என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.

Billa 2 – Twitter Trend

இன்று காலையில் இருந்து இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கிறது இந்த ஹேஷ்டேக். இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் வைத்து இந்த ஹேஷ்டேக்கை அழகு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.

இதில் இடையில் வந்த விஜயின் ரசிகர்கள் ஓடாத படத்துக்கு எதுக்குப்பா இந்த வெளம்பரம், என்று கலாய்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ட்விட்டரை கண்டுபிடித்ததே இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளத்தான் போல என்று எண்ணும்படி காலையில் இருந்தே ஆரம்பித்து விட்டது இவர்களின் சண்டைகள்.

இந்த ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக விஜய் ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.ஆனால் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது, பதிலடி மட்டும் கன்பார்ம் என்று தெரிகிறது.