திருச்சி: விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் மூலம் வெளியிட்டால் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்றும், இந்த விவகாரத்தை முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் திருச்சி மாயாஸ் ஹோட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.என்.அண்ணாமலை தலைமை வகித்தார்.
கூட்டத்தில் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பு டி.டி.எச்சில் வெளியிட கமலஹாசன் எடுத்துள்ள முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்பு அண்ணாமலை, அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், விநோகஸ்தர்கள் பெடரேஷனின் தலைவர் சேலம் முருகேசன் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறுகையில்,
விஸ்வரூபம் படம் குறித்து விவாதித்தோம். இந்த படத்தையும் சரி, எந்த ஒரு படத்தையும் சரி டி.டி.எச் மூலம் வெளியிட்டால் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். காரணம் டி.டி.எச்சில் வெளியிட்ட பின்பு ரசிகர்கள் யாரும் தியேட்டர்களுக்கு வர மாட்டார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிட்டார்.
இந்த பிரச்சனை குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தெரியப்படுத்துவோம். அவர் நல்ல முடிவு எடுப்பார். எப்பொழுதும் முதல்வர் அம்மா திரைப்படத்துறையினருக்கு ஆதரவாக இருக்கின்றவர். எனவே, அவர் இந்த விஷயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறோம்.
டி.டி.எச் மூலம் ஒரு திரைப்படத்தை வெளியிட்ட பிறகு அதை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்று ஏற்கனவே மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். எங்களது திரைத்துறையை காப்பாற்ற இது தான் ஒரே வழி. எங்களை நம்பி 2 லட்சம் குடும்பங்கள் உள்ளது. நாங்கள் அழிந்துவிட்டால் திரைப்படத்துறை வளராது.
தமிழகத்தில் 2,800 திரையரங்குகள் இருந்தன. இதில் பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. தற்பொழுது 1,200 திரையரங்குகள் தான் உள்ளது. கமலஹாசன் நடித்த படங்களை நாங்கள் தான் மூலை முடுக்கெல்லாம் போஸ்டர் ஒட்டி அவருக்கு சினிமா துறையில் புகழை பெற்றுத் தந்தோம்.
பெரிய திரையில் நடித்துவிட்டு யாரும் சின்னத்திரைக்கு செல்வதில்லை. நடிகர் கமல்ஹாசன் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க முயற்சிக்கிறார். அவர் நல்லவர். பெரிய நடிகர், ஏன் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருக்கிறார் என தெரியவில்லை.
எங்கள் முடிவுக்கு அனைத்து திரையரங்க உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களும் உறுதுணையாக இருப்பார்கள். இந்த முடிவுக்கு பின்பு எந்த திரையரங்க உரிமையாளர்களும் கமல் படத்தை வெளியிட்டால் அவர்களுக்கு திரைப்பட விநியோகஸ்தர்கள் படம் தரமாட்டார்கள். இந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றனர்.
இக்கூட்டத்தில் கூடுதல் தலைவர் அபிராமி ராமநாதன், பொது செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஹரி, இணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் மாநில தலைவர் சேலம் முருகேசன், மதுரை செல்வின்ராஜ், மதுரை ஷாகுல் ஹமீது, கோவைராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. நெல்லை மலைராஜா, திருச்சி பிரான்சிஸ், நாமக்கல் மோகன், மன்னார்குடி சரவணன், தாமஸ், ரம்பா ஊர்வசி லோகநாதன், மரியம் தியேட்டர் அதிபர் ஆசிக் மீரா உள்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.